சூதாட்ட உரிமம் நிறுத்தம்: நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு கோரிக்கை வரலாம் – சனுசி
- Surendran Sumdraraj
- 26 Aug, 2026
அலோர் ஸ்டார், ஆக. 26-
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சூதாட்ட நிலையங்களுக்கான புதிய உரிமங்களை வழங்குவதையும், ஏற்கனவே உள்ள உரிமங்களைப் புதுப்பிப்பதையும் நிறுத்திய கெடா மாநில அரசின் கொள்கையைத் தொடர்ந்து, சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இழப்பீட்டு கோரிக்கைகள் எழலாம் என கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தால், மாநில அரசு தனது கொள்கையை நீதிமன்றத்தில் உறுதியாக பாதுகாக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சூதாட்ட நடவடிக்கைகளை முழுமையாக தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அரசுக்கு இழப்பீட்டு பொறுப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.
“இந்த இழப்பீட்டுத் தொகை மிகப் பெரியதாக, நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் வரை இருக்கலாம். சூதாட்ட நிறுவனங்கள் எவ்வளவு லாபம் ஈட்டுகின்றன என்பது எங்களுக்குத் தெரியாது. இருப்பினும், முதலில் நீதிமன்றத்தில் நாங்கள் போராடுவோம்,” என்றார்.
மேலும், மாநில அரசின் பணத்தில் இருந்து ஒரு சிறிய தொகையைக்கூட சூதாட்ட நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அதற்கு எதிராக கடைசி வரை சட்டப் போராட்டம் நடத்துவோம் என சனுசி உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



