ஆண்டனி லோக்கை ஆணவக்காரர் என்ற அக்மால் சாலே மன்னிப்புக் கேட்க வேண்டும்!
- Muthu Kumar
- 23 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 23-
ஜசெக தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக்கை ஆணவக்காரர் என்று வசைபாடியிருக்கும் அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் டாக்டர் அக்மால் சாலே மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பினாங்கு ஜசெக தலைவர் ஒருவர்வலியுறுத்தி இருக்கிறார்.
அக்மாலின் அக்கூற்று அபத்தமானது, பொறுப்பற்றது என்று பினாங்கு ஜசெகவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஃபீ பூன் சீ சாடினார்.தம்முடைய கடமைகளை லோக் திறம்பட ஆற்றி வருகிறார். ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் இதர கட்சிகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறார் என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஃபீ தெரிவித்தார்.
மறுபுறம் பார்த்தால், அக்மால் அடிக்கடி முதிர்ச்சியற்ற நிலையில் செயல்பட்டு வருகிறார் என்றார் அவர். “அல்லாஹ்” எனும் வார்த்தை பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்கப்பட்ட விஷயத்தையும் கலாச்சார நிகழ்ச்சியொன்றில் சீனக் கொடிகள் ஏந்தப்பட்ட விவகாரத்தையும் அக்மால் பெரிய சர்ச்சையாக மாற்றியதைச் சுட்டிக்காட்டி ஃபீ அவ்வாறு கூறினார். அக்மால் தம்முடைய விவேகமற்ற, பொறுப்பற்ற அறிக்கைக்காக ஆண்டனி லோக்குடன் நிபந்தனையற்ற முறையில் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருடன் ஒப்பிடுகையில் என்னுடைய தளம் முற்றிலும் வேறுபட்டது என்று மலேசியாகினி பத்திரிகைக்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில் லோக் கூறியிருந்தார். அதற்கு மறுமொழி கூறியிருந்த அக்மால், போக்குவரத்து அமைச்சருமான ஆண்டனி லோக் ஆணவத்துடன் பேசியிருப்பதாகச் சாடியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *