மாணவர் பாதுகாப்புக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் பதற்றமடைய வேண்டாம் – கல்வி அமைச்சர்
- Surendran Sumdraraj
- 13 Aug, 2026
கோலாலம்பூர், ஆக. 13-
சமீபத்தில் பல்வேறு தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள மாணவர் பாதுகாப்புக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு விரிவான விளக்கங்களை வழங்கும் வரை ஆசிரியர்கள் அமைதியாக இருந்து, அமைச்சுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவர் பாதுகாப்புக் கொள்கை, மாணவர்களுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் விரிவான பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிச் சமூகத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதே இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கம் என அவர் கூறினார்.
மேலும், பள்ளிகளில் ஏதேனும் சம்பவங்கள் நிகழும்போது, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பொறுப்புகள் என்ன, எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் இந்தக் கொள்கை உள்ளடக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ள கவலைகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிப்பதற்காக சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு கல்வி தலைமை இயக்குநருக்கும் கல்வி அமைச்சின் சட்ட ஆலோசகருக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாக ஃபத்லினா கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



