ஒவ்வொரு பகுதியிலும் பகிர்ந்து பயன்படுத்தும் முழுமையான விளையாட்டு மைதானம்: கல்வி அமைச்சு திட்டம்
- Surendran Sumdraraj
- 18 Aug, 2026
கோத்தா பாரு, ஆக. 18-
நகர்ப்புறங்கள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு வலயத்திற்கும் முழுமையான விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்து, அதனை அப்பகுதியில் உள்ள பள்ளிகள் பகிர்ந்து பயன்படுத்தும் திட்டத்தை கல்வி அமைச்சு (KPM) பரிசீலித்து வருவதாகக் கல்வி தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் அஸாம் அஹ்மாட் கூறினார்.
குறிப்பாக நகர்ப்புறப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், விளையாட்டு மைதானப் பகுதிகள் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
“விளையாட்டு மைதானம் என்பது முக்கியமான விவகாரம். முன்பு இருந்ததைப் போன்று ஒவ்வொரு பள்ளியிலும் தனித்தனியாக விளையாட்டு மைதானத்தை அமைப்பது இனி சாத்தியமில்லாமல் இருக்கலாம். கிராமப்புறங்களில் இந்தப் பிரச்சினை பெரிய அளவில் இல்லை.
“ஆனால் நகர்ப்புறப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படுவதால், சில நேரங்களில் விளையாட்டு மைதானப் பகுதிகளைத் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது,” என்றார்.
இதனால், ஒவ்வொரு பகுதியிலும் முழுமையான வசதிகளைக் கொண்ட விளையாட்டு மைதானத்தை உருவாக்கி, அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் மாணவர்கள் அதனைப் பொதுவாகப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அமைச்சு திட்டமிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



