தேர்தல் பரபரப்பு! அமித்ஷா, ராகுல் இன்று சென்னை வருகை!

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஏப் 6: இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்னை வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலேயே கட்சி நிர்வாகிகளுடன் அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. புதுச்சேரி, கேரளத்தில் ஏப்.9-ம் தேதியும், தமிழகத்தில் ஏப்.23-ம் தேதியும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 27 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த முறை அதிக இடங்களைக் கைப்பற்றும் முனைப்பில், பாஜக தேசியத்தலைவர்கள் தொடர்ந்து தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த ஏப்.3-ம் தேதி இந்திய பிரதமர் மோடி சென்னை வந்து 2 நாட்கள் நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை வருகிறார். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மாலை 3.15 மணிக்கு தனிவிமானம் மூலம் சென்னை விமானநிலையம் வந்தடைகிறார்.

சென்னையில் இருந்து மதியம் 3.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் அவர், அங்கு என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். மாலை 6.10 மணிக்கு மீண்டும் சென்னை திரும்பும் அமித் ஷாவை, விமான நிலையத்தில், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் வரவேற்கின்றனர்.

தொடர்ந்து, முக்கியப் பிரமுகர்கள் ஓய்வறையில், தமிழக பாஜக தலைவர்களுடன் தேர்தல் நிலவரம், பிரச்சார உத்திகள், பிரதமர் ஏற்கெனவே வழங்கிய அறிவுரைகள் குறித்து அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பின்னர், தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் இன்று தமிழகம், புதுச்சேரிக்கு வருகிறார். இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் ராகுல் காந்தியை, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர்.

விமான நிலைய ஓய்வறையில் கட்சித் தலைவர்களுடன் தமிழக தேர்தல் சூழல் குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். பிறகு, சிறிய ரக விமானம் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிக்கிறார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *