PRIMAS தேர்தல்: தலைவர் பதவிக்கு C.கிருஷ்ணன் போட்டி! அனுபவமும் இளமையும் கலந்த அணியை அறிவித்தார்

top-news

(சண்.சிவா / சுரேந்திரன்)

கோலாலம்பூர், நவம்பர் 22:

மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான PRIMAS  அமைப்பின் ஆண்டுப் பொதுக்கூட்டமும், நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடவுள்ளதாகச் சங்கத்தின் தற்போதைய துணைத் தலைவர் C.கிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வரும் நவம்பர் 25-ஆம் தேதி புதன்கிழமை  நடைபெறவுள்ள தேர்தலில், இரு பிரிவுகள் போட்டியிடும் சூழலில், ஒன்றாவது அணியி தலைவராக வேட்பாளர் எண் 1ல் C.கிருஷ்ணன் களம் காண்கிறார்.

இந்நிலையில, சங்கத்தில் தமது 30 ஆண்டுகால பயணம், தமது நீண்டகாலப் பங்களிப்பு குறித்துப் பேசிய கிருஷ்ணன் 1993-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் உணவக உரிமையாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டபோது அதன் இடைக்காலத் துணைச் செயலாளராகத் தமது பயணத்தைத் தொடங்கியதை நினைவுகூர்ந்தார்.

பின்னர் இச்சங்கம் தேசிய அளவிலான அமைப்பாக உருவெடுத்தபோது மீண்டும் துணைச் செயலாளராகவும், முன்னாள் தலைவர் டத்தோ ராமாவின் தலைமையின்கீழ் முழு பதவிக்காலத்திற்கும் செயலாளராகவும் பணியாற்றியதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து உதவித் தலைவராகவும், தற்போது டாக்டர் சுரேஷ் தலைமையின்கீழ் துணைத் தலைவராகவும் தாம் சேவையாற்றி வருவதாக அவர் கூறினார்.

அனுபவமும் இளமையும் இணைந்த அணி

உணவகத் துறையின் சவால்களை எதிர்கொள்ள அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினர்களும், துடிப்புமிக்க இளம் தலைமுறையினரும் இணைந்த வலுவான அணியைத் தாம் உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார்.

அவரது அணியில் போட்டியிடும் முக்கிய நிர்வாகிகள் விவரம்:

 * துணைத் தலைவர்: டாக்டர் என். ராமநாதன் (பினாங்கு - உணவகத் துறை மற்றும் பிரிமாஸ் சங்கத்தில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்)

 * உதவித் தலைவர்: கே. விஜயபெருமாள் (சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே உறுப்பினராக இருப்பவர்; 12 ஆண்டுகள் பொருளாளராகப் பணியாற்றியவர்)

 * செயலாளர்:  பி. பிரவீன் (இளம் தலைமுறைப் பிரதிநிதி)

 * பொருளாளர்: செல்வராஜு (ஜொகூர் - கடந்த 6 ஆண்டுகளாகப் பொருளாளராகப் பணியாற்றி வருபவர்)

 * துணைப் பொருளாளர்: த பி. கிருஷ்ணன் (பகாங்)

 * துணைச் செயலாளர்:  மகா விஷ்ணு (சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர்)

சவால்களைக் கடந்த சாதனைகள்

கடந்த காலங்களில் உணவகத் துறை சந்தித்த இக்கட்டான சூழல்களில் சங்கம் ஆற்றிய பணிகளை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ஓராண்டுக்கும் மேலாக உணவகங்கள் செயல்பட முடியாமல் தவித்தபோது, அரசாங்கத்திடம் தொடர்ந்து முறையிட்டுத் தேவையான தீர்வுகளைப் பெற்றுத் தருவதில் தாம் முக்கியப் பங்காற்றியதாகக் கூறினார். 

மேலும், உணவகத் துறையினருக்குத் தொடர் தலைவலியாக இருந்து வரும் அந்நியத் தொழிலாளர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் பிரிமாஸ் தொடர்ந்து பாடுபட்டு வருவதாகத் தெரிவித்த அவர், உறுப்பினர்கள் தமது அனுபவமிக்க அணிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நாட்டில் உள்ள இந்திய உணவகங்களின் வளர்ச்சிக்கும், அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கும் PRIMAS தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று நாட்டில் இந்திய உணவகங்கள் மிகவும் செழிப்பாகவும், அதிக எண்ணிக்கையிலும் வளர்ச்சியடைந்திருப்பதற்குப் பிரிமாஸ் சங்கமே முக்கியக் காரணம் என்று கூறினார். 

"டத்தோ ராமா காலம் முதல் தற்போது டத்தோ ஜே. சுரேஷ் அவர்களின் தலைமை வரை, சங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் நான் உறுதுணையாக இருந்து வருகிறேன். குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஓராண்டுக்கும் மேலாகத் தொழில் செய்ய முடியாமல் உணவகங்கள் முடங்கியிருந்தபோது, அரசாங்கத்திடம் தொடர்ந்து முறையிட்டு அப்போதைய சூழலுக்கு ஏற்பப் பல்வேறு தீர்வுகளைப் பெற்றுத் தந்ததில் நான் முக்கியப் பங்கு வகித்துள்ளேன்."


கூடுதல் தொழிலாளர்களுக்கான உறுதிமொழி:

"அந்நியத் தொழிலாளர் பிரச்சனை என்பது நமது துறைக்குத் தொடர்ச்சியான பெரும் தலைவலியாகவே உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு 100 சதவீதம் தீர்வு கிடைத்துவிட்டதா என்பது கேள்விக்குறியே என்றாலும், உணவகங்களுக்குத் தொழிலாளர்கள் அவசியம் என்பதை அரசாங்கத்திற்குத் தொடர்ந்து உணர்த்தி, அந்த வாய்ப்புகளை உயிர்ப்பித்து வருகிறோம். அதன் பலனாக, இன்று கூடுதலாக 10 முதல் 15 தொழிலாளர்கள் வரை கிடைப்பதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது."

அரசாங்கத் தரப்புடனான பேச்சுவார்த்தைகள்:

"தற்போதைய அரசாங்கச் சூழலில் நமக்குச் சில சவால்கள் இருந்தாலும், டத்தோ ஜே. சுரேஷ் அவர்களின் முன்னெடுப்பில் பிரதமர் அவர்களை இரண்டு மூன்று முறை நேரில் சந்தித்து நமது சிரமங்களை எடுத்துரைத்துள்ளோம். மேலும், டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அவர்களுடனும் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதற்கு முன்பு அமைச்சராக இருந்த டத்தோ சிவகுமார்அவர்களும், கோவிட் காலத்திற்குப் பிந்தைய நமது இக்கட்டான சூழலைப் புரிந்துகொண்டு, உள்துறை அமைச்சகம் (KDN) மற்றும் பிரதமரிடம் பேசிப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர் ஒப்புதல்களைப் பெற்றுத் தந்தார். அதன் தொடர்ச்சியாகவே இன்றைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன."

இந்தியத் தொழிலாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் ரத்து:

"தொழிலாளர்களை அழைத்து வருவதில் நிலவும் சிக்கல்களைக் களையச் சங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கடந்த வாரம், இந்தியாவிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, அதற்கு அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இது குறித்து ஆராய்ந்தபோது, அந்தக் கட்டணத்திற்கான சரியான முகாந்திரம் தெளிவாக இல்லை. உடனடியாக இது குறித்துச் சம்பந்தப்பட்ட தரப்பிடம் முறையிட்டு உதவி கோரினோம். அவர்களும் உடனடியாகச் செவிமடுத்துத் தக்க நடவடிக்கை எடுத்ததால், தற்போது அந்தக் கட்டணம் தேவைப்படாது என்ற நிலை உருவாகியுள்ளது.

எனவே, பிரிமாஸ் உறுப்பினர்கள் எவருக்கேனும் இது போன்ற தேவையற்ற கட்டணங்கள் விதிக்கப்பட்டாலோ அல்லது தொழிலாளர் விவகாரங்களில் சிக்கல்கள் ஏற்பட்டாலோ, உடனடியாகப் பிரிமாஸ் சங்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." 

பெருமைக்குரிய விஷயம்!

"நமது சங்கத்திற்குக் கோலாலம்பூர் மாநகரின் மையப்பகுதியில் சொந்தமாக ஒரு சிறந்த கட்டிடம் இருப்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயமாகும். முன்னாள் தலைவரும், தற்போதைய கௌரவத் தலைவருமான டாக்டர் ராமலிங்கம் அவர்களின் தலைமையின் கீழ், நான் செயலாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில், பல பிரிமாஸ் நண்பர்களின் ஒத்துழைப்புடன் இந்தக் கட்டிடம் வாங்கப்பட்டது. இதில் எனது பங்கும்  இருந்தது என்பதில் நான் பெருமை கொள்கிறேன். இன்று இந்த நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கு மத்தியில், நமது இயக்கம் ஒரு ஆரோக்கியமான, வலுவான இயக்கமாகத் திகழ்வதற்கு இதுவே முக்கியச் சான்றாகும்.

விண்ணப்ப நடைமுறைகளை விரைவுபடுத்த டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் உறுதி:

"பிரிமாஸ் சங்கத்தின் தொடர் முயற்சியால், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் ஆகியோரின் அறிவிப்பிற்கிணங்க, இந்திய உணவகங்களுக்கு 15,000 அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உணவக உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சுகளில் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்து ஒப்புதல் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்த விண்ணப்ப நடைமுறைகள் மிகவும் நீளமாகவும் தாமதமாகவும் இருப்பதாக உறுப்பினர்கள் முறையிட்டனர். இது குறித்து டத்தோ ஸ்ரீ ரமணன் அவர்களிடம் எடுத்துரைத்தபோது, இந்தப் பிரச்சனைகளை எவ்வளவு விரைவாகத் தீர்க்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விரைவுபடுத்தத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார்."

சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதும் ILO கண்காணிப்பும்:

"இனிவரும் காலம் சவால்கள் மிகுந்ததாக இருக்கும் என்பதால், உணவக உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்கள் (Documents), தொழில் நிர்வாக முறை மற்றும் தொழிலாளர்களை நடத்தும் விதம் ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப முறையாக நடந்து கொள்ள வேண்டும். அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு (ILO) நமது நாட்டில் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதத்தையும், அது தொடர்பான புகார்களையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இது நாட்டின் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியைப் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இத்தகைய கடுமையான வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. எனவே, அரசாங்கத்தின் தேவைகளையும் நமது சிரமங்களையும் சமநிலைப்படுத்தி, விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படும் மனப்பான்மைக்கு உறுப்பினர்கள் வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்திய உணவகங்கள் செழிப்பாக வளர்ந்ததற்குப் பிரிமாஸ் முக்கியக் காரணமாகும். டத்தோ ராமா காலம் முதல், முன்னாள் அமைச்சர்கள் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு, டத்தோ ஸ்ரீ எம். சரவணன், வி. சிவகுமார் ஆகியோரும், தற்போது டத்தோ ஜே. சுரேஷ் அவர்களின் தலைமையின் கீழ் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் அவர்களும் நமது துறைக்குப் பெரும் உதவிகளைச் செய்து வருகின்றனர்.

தற்போதைய அரசாங்க அமைப்பின் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்!"

இவ்வாறு C.கிருஷ்ணன் தெரிவித்தார்! 


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்