'Lindung 24 Jam' திட்டம் சுமை அல்ல, தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான முக்கிய வளையம் - டத்தோஶ்ரீ ரமணன்
- THINAGAREN SANGGAREN
- 08 Jul, 2026
சிரம்பான், ஜூலை 8-
பெர்கெசோவின் கீழ் செயல்படுத்தப்படும் 'Lindung 24 Jam' திட்டம், தொழிலாளர்களுக்குச் சுமை அல்ல, மாறாக மிகவும் மலிவு விலையிலான ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும் என்று மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு விபத்துகள், ஊனம் அல்லது வருமானம் இழப்பு போன்ற எதிர்பாராத பாதிப்புகள் ஏற்படும்போது, ஒரு பாதுகாப்பு வளையமாக இத்திட்டம் செயல்படுகிறது. மிகவும் குறைந்த அளவில் நிர்ணயிக்கப்பட்ட இந்தக் கட்டணத்தை ஒரு சுமையாகக் கருதாமல், எதிர்காலப் பாதுகாப்பிற்கான ஒரு முதலீடாகப் பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மாதாந்திர ஊதியத்தில் 0.75 சதவீத பங்களிப்பு என்பது, எதிர்பாராத துன்பங்கள் ஏற்படும் போது குடும்பத்தின் நலனை உறுதி செய்ய மிகக் குறைவான தொகையே ஆகும். விபத்துகள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதால், தொழிலாளர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க இத்திட்டத்தில் இணைந்திருப்பது அவசியமானது என்று அவர் விளக்கினார்.
செவ்வாய்க்கிழமை சிரம்பானில் நடைபெற்ற 'லிண்டுங் கெர்ஜாயா மடானி' விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் திட்டம் வழங்கும் மருத்துவ உதவி, நிதி உதவி மற்றும் மறுவாழ்வு ஆதரவு போன்ற நன்மைகளைத் தொழிலாளர்களும் முதலாளிகளும் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கடந்த ஜூன் 1 முதல், 1969-ஆம் ஆண்டின் தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள 90 லட்சத்திற்கும் அதிகமான பங்களிப்பாளர்கள், பணி தொடர்பான விபத்துகள் தவிர்த்த பிற விபத்துகளுக்கும் தானாகவே முழுமையான காப்பீடு பெற்றுள்ளனர் என்பதை அவர் நினைவுபடுத்தினார்.
இதற்கிடையில், கடந்த 2020 முதல் இந்த மாதம் வரை நெகிரி செம்பிலானில் 'MYFutureJobs' இணையதளத்தில் 145,625 வேலை தேடுபவர்கள் பதிவு செய்துள்ளதாகவும், 45,535 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40 முதலாளிகள் 2,000 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளனர். மேலும், வேலை தேடுபவர்களின் திறனை மேம்படுத்த 'MYFutureJobs AI+' என்ற புதிய முன்முயற்சியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



