உம்மா ஒற்றுமை அவசியம்! நான் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டேன்! - அக்மால் சலே
- Shan Siva
- 10 Sep, 2026
கோலாலம்பூர், செப் 10: மலாய்-முஸ்லிம் அரசியல் ஒத்துழைப்பை
வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, PAS கட்சியுடன் இணைந்து முஸ்லிம் சமூகம் எனப்படும் 'உம்மா' ஒற்றுமைக்கான ஒரு பிரம்மாண்டமான
கூட்டத்தை நடத்த முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தை ஆதரிக்க UMNO இளைஞர் அணி தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PAS கட்சியின்
சமீபத்திய மாநாட்டில் அதன் இளைஞர் அணித் தலைவர் அஃப்னான் ஹமிமி தைப் அஸாமுடின்
முன்மொழிந்த இந்த முயற்சி, வெறும் கூட்டமாக
மட்டும் நின்றுவிடாமல், மலாய்
இளைஞர்களுக்கான உறுதியான விவாதங்களுக்கும் தீர்வுகளுக்கும் வழிவகுக்க வேண்டும்
என்று UMNO இளைஞர் அணித்
தலைவர் டாக்டர் அக்மால் சலே கூறினார்.
தனது கொள்கை
உரையில், அஃப்னான் ஒரு
பிரம்மாண்டமான 'உம்மா' ஒற்றுமை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இதனை
அடுத்து அந்த அழைப்பை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கோலாலம்பூர் உலக
வர்த்தக மையத்தில் நடைபெற்ற UMNO இளைஞர் அணி
கூட்டத்தில் அக்மால் தனது கொள்கை உரையின்போது கூறினார்.
மலாய் சமூகத்தின்
எதிர்காலம் குறித்து விவாதிக்கவும், மலாய் இளைஞர்களுக்கான நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளைக் காணவும், தனது அணியின் 'ரிம்புன்' (Rimbun) அல்லது தேசிய அளவிலான வட்டமேஜை விவாத முன்னெடுப்பின் மூலம் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த
முன்னெடுப்பின் கருத்துகளும் உணர்வும் 'உம்மா' ஒற்றுமைக்கான
நாடு தழுவிய பிரச்சாரப் பயணம் (roadshow) மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.
ஒத்துழைப்பு
வெற்றிபெற UMNO மற்றும் PAS
ஆகிய கட்சிகள் தங்கள் தனித்துவமான
அடையாளங்களைக் கைவிட வேண்டிய அவசியமில்லை என்று அக்மால் குறிப்பிட்டார்.
UMNO தொடர்ந்து UMNO-வாகவே இருக்கும், PAS தொடர்ந்து PAS-ஆகவே இருக்கும். முதிர்ச்சியான ஒற்றுமை என்பது நமது அடையாளங்களைக் கைவிடுவதைக்
கோருவதில்லை; மாறாக, நமது கருத்து வேறுபாடுகளை விவேகத்துடன்
கையாள்வதையே அது கோருகிறது என்று அவர்
கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

