மலேசியத் திரைப்படங்களின் ஆதரவுக் குரலாக MMFC
- Surendran Sumdraraj
- 21 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 21: மலேசியத் தமிழ்த் திரைப்படங்கள் உலகத் தரத்திற்கு உருவாக்கம் கண்டு வருகின்றன. சிறந்த இயக்குநர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் நடிகர்கள் என எல்லாத் துறைகளிலும் புதிய பரிமாணம் பெற்று பலரையும் கவர்ந்து வருகிறது மலேசியத் திரைப் படைப்புகள். ஆனாலும், வெகு ஜன மக்களின் ஆதரவும் இங்கே அவசியம் என்பதோடு, இக்கலைத்துறைக்கு கூட்டு சமூகப் பொறுப்பும் தேவையாய் இருக்கிறது. எதிர்காலத் தலைமுறையின் கலை வெளிப்பாட்டை படைக்க, அவர்களுக்கான களம் அமைத்துக் கொடுக்க, மலேசியத் தமிழ்த் திரைக்கான ஆதரவு வலுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
அந்த வகையில், மலேசியத் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும், உள்நாட்டுக் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் திறமைகளை ஊக்குவிப்பதற்கும் புதிய முயற்சியாக Malaysian Movie Fan Club (MMFC) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
MKU எனப்படும் Malaysia Kalai Ulagam நிறுவனர் டாக்டர் SP பிரபா தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, மலேசியத் திரைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் மேலும் கொண்டு சேர்ப்பதுடன், உள்ளூர் திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான ஆதரவுக் களமாகத் திகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
MMFC-யின் அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வு, Dancing Raja Studios நிறுவனத்தின் நிறுவனர் Dato’ Seri G அவர்களால் சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மலேசியப் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு MMFC-யின் புதிய முயற்சிக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
மலேசிய மூத்த நடிகர் KS Maniam, நடிகர்கள் Vinoshan, Loga Varman, நடிகை Susila மற்றும் Dato’ Seri Josy Nathan உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு MMFC இயக்கத்திற்கு வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தனர்.
மலேசியாவில் உருவாகும் திரைப்படங்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் ஆதரவையும் உருவாக்குவதில் திரைப்பட ரசிகர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
MMFC மூலம் திரைப்பட ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடகங்கள் மற்றும் திரைப்படத் துறை ஆதரவாளர்கள் என அனைவரையும் ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினார்.
மேலும், மலேசியத் திரைப்படங்களை ஊக்குவித்தல், புதிய உள்ளூர் திறமைகளை அடையாளம் காணுதல், திரைப்பட வெளியீடுகள் மற்றும் கலை நிகழ்வுகளுக்கு ரசிகர்களின் ஆதரவை அதிகரித்தல், உள்ளூர் படைப்புகளுக்கான விழிப்புணர்வை உருவாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் MMFC திட்டமிட்டுள்ளது!

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



