அடுத்த 3 முதல் 5 நாள்களுக்கு புகைமூட்டம் நீடிக்கும்! - மெட்மலேசியா
- Shan Siva
- 13 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 13: மலேசியாவில் தற்போது நிலவி வரும் புகைமூட்டம் மற்றும் காற்று மாசுபாடு, அடுத்த 3 முதல் 5 நாட்களுக்கு பெரிய அளவில் மாற்றமின்றி நீடிக்கக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் மழை பெய்யும் என்று
எதிர்பார்க்கப்பட்டாலும், அது நாடு முழுவதும் காற்றின் தரத்தை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும்
என்று எதிர்பார்க்க முடியாது என்று மெட்மலேசியாவின்
தேசிய வானிலை மற்றும் நிலநடுக்க செயல்பாட்டு மையத்தின் மூத்த இயக்குநர் மக்ரூன்
ஃபட்ஸ்லி ஃபஹ்மி கூறினார்
தற்போதைய வறண்ட காலநிலையுடன் ஒப்பிடும்போது
அடுத்த சில நாட்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும். ஆனால், புகைமூட்டம்
அதிகமாக இருக்கும் பகுதிகளில் குறைந்த அளவு மழை பெய்தால் அதன் தாக்கத்தை முழுமையாக
அகற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சரவாக்கின் மேற்கு மற்றும்
தெற்குப் பகுதிகளில் புகைமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக செரியான்
பகுதியில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள்
மூடப்பட்டன.
மேலும், கிள்ளான் பள்ளத்தாக்கு
உள்ளிட்ட தீபகற்ப மலேசியாவின் சில பகுதிகளிலும் புகைமூட்டத்தின் தாக்கம்
காணப்படுகிறது.
தற்போதைய நிலைமைக்கு முக்கிய காரணமாக மே
முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் மழைப்பொழிவு குறைவதால் வெப்பம்
அதிகரித்து, திறந்தவெளி தீப்பற்றுதலுக்கான வாய்ப்பு
அதிகரிக்கிறது. இதன் விளைவாக புகைமூட்டமும் அதிகரிக்கிறது.
பொதுமக்கள் திறந்தவெளியில் தீ வைப்பதைத்
தவிர்க்க வேண்டும் என்றும், காற்றின் தரம் திருப்திகரமாக இல்லாத நிலையில் தேவையற்ற வெளிப்புற
நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மெட்மலேசியா அறிவுறுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் நிலவரப்படி, சரவாக்கில் சமரஹான், செரியான், கூச்சிங், ஸ்ரீ அமான், சரிகேய், முகா மற்றும் சிபு ஆகிய பகுதிகளிலும், சிலாங்கூரில் ஜொஹான் செத்தியா, கோலாலம்பூரில் செராஸ், பினாங்கில் மிண்டன் ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



