நஜிப் மன்னிப்பிற்கு நான் காரணமா? - அன்வார் விளக்கம்
- Shan Siva
- 21 Sep, 2026
ஷா ஆலம், செப் 21: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்புக்குத் தான் வழிவகுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மறுத்துள்ளார்.
ஒவ்வொரு கைதிக்கும் அரச மன்னிப்பு கோரி விண்ணப்பிக்க உரிமை உண்டு என்று அவர் கூறினார்.
கூட்டரசு அரசாங்க அளவில் பிரதமர் மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஆகியோரின் ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு மன்னிப்பு வாரியம் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதற்கான அதிகார வரம்பைக் கொண்டுள்ளது என்றும், அதே வேளையில் இறுதி முடிவு மாமன்னர் வசமே உள்ளது என்றும் அன்வார் தெரிவித்தார்.
ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு சமர்ப்பிக்க உரிமை உண்டு என்பதை தாம் மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், டத்தோ ஸ்ரீ நஜிப் உட்பட யாருக்கும் அந்த உரிமையை தாம் ஆதரிப்பதாகக் கூறினார்.
மன்னிப்பு வாரியம் மற்றும் மன்னரின் பரிசீலனைக்காகத் தனது மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்க அவருக்கு உரிமை உள்ளத என்று நேற்று பிற்பகல் நடைபெற்ற 'பெரிந்திஸ் ரிஃபோர்மிஸ்' (Perintis Reformis) சந்திப்புக் கூட்டத்தில் அன்வார் கூறினார்.
இது பக்காத்தான் ஹராப்பானின் (Pakatan Harapan) செயல் என்று கூறி, எங்கள் முன்னாள் கூட்டாளிகளிடமிருந்து மாறுபட்ட கருத்துகள் வருகின்றன. பிரதமராக, நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை; மக்கள் என்னை விமர்சிக்கலாம், ஆனால் அது உண்மையல்ல. அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே எனது நிலைப்பாடு தெரியும். வாக்குகளைப் பெற விரும்பினாலும், அது பொய் சொல்வதன் மூலம் இருக்கக்கூடாது. நான் தான் இதற்கு வழிவகுத்தேன் என்று கூறுவது தவறானது என்று அவர் கூறினார்.
அரசியலமைப்பு கோட்பாடுகளின்படி, மன்னிப்பு வழங்குதல் மற்றும் அரச விருதுகளை வழங்குதல் ஆகியவை சுல்தான்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் அல்லது மாட்சிமை தங்கிய மாமன்னர் ஆகியோரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று அன்வார் கூறினார்.
அதே வேளையில், இந்த நிபந்தனை மன்னிப்பு 1MDB தொடர்பான வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் உட்பட, நடைபெற்று வரும் பிற வழக்குகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்குத் தடையாக இருக்காது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
ஊழலை எதிர்த்துப் போராடுவதிலும், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் சட்ட அமைப்பின் மூலம் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதிலும் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

