குறைந்தபட்ச ஊதியத்தை RM3,100 ஆக உயர்த்த MTUC கோரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,  ஆக 24-

 அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் தொழிலாளர்களின் திறன்கள், கல்வி மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி, குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு RM3,100 ஆக உயர்த்த வேண்டும் என்று மலேசிய தொழிற்சங்க சம்மேளமான MTUC கோரிக்கை விடுத்துள்ளது.

வீட்டுவசதி, உணவு, போக்குவரத்து மற்றும் பிற அடிப்படைத் தேவைகளின் அதிகரித்த செலவுகளைக் கருத்தில் கொண்ட பிறகு, RM3,100 என்பது ஒரு நியாயமான புதிய குறைந்தபட்ச ஊதியம் என்று MTUC பொதுச் செயலாளர் கமரூல் பஹாரின் மன்சோர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

ஊதிய உயர்வு அவர்களின் திறன்கள், கல்வி மற்றும் பணி அனுபவத்தைப் பிரதிபலிப்பதை உறுதிசெய்ய, குறைந்தபட்ச ஊதியக் கட்டமைப்பை நடுத்தர வருமானம் பெறும் தொழிலாளர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இது திறன் பொருத்தமின்மைகளைச் சரிசெய்யவும், நிறுவனங்கள் தரமான திறமையாளர்களை ஈர்க்கவும், உற்பத்தித்திறன் மற்றும் ஊதிய வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவும் என்று அவர் கூறினார்.

குறைந்தபட்ச ஊதியத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருவதாக மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் அறிவித்தது தொழிலாளர்களுக்கு ஒரு நேர்மறையான முன்னேற்றம் என்று அவர் கூறினார்.

தேசிய ஊதிய ஆலோசனைச் சட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஊதியம் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பிப்ரவரி 2025-ல் அமல்படுத்தப்பட்ட ஊதிய உயர்வைத் தொடர்ந்து, புதிய ஊதிய விகிதம் பிப்ரவரி 2027-ல் நடைமுறைக்கு வர வேண்டும் என்று அவர் கூறினார்.

இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், புதிய ஊதிய விகிதம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில், எந்தவொரு தாமதமும் தொழிலாளர்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்பென்று கமாருல் சுட்டிக்காட்டினார்.

முறையான ஊதியக் கட்டமைப்பு இல்லாததால், 10 ஆண்டுகள் பணிபுரிந்த போதிலும் சில தொழிலாளர்கள் இன்னும் RM1,700 மட்டுமே சம்பாதித்து வருவதாக அவர் கூறினார்.

புதிய குறைந்தபட்ச ஊதியம் குறித்த உள்ளீடுகளையும் கருத்துக்களையும் வழங்குவதன் மூலம், தேசிய ஊதிய ஆலோசனைக் குழுவின் வழியாக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற MTUC தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

தற்போதைய மாத ஊதியமான RM1,700-ஐத் தொடர வேண்டுமா அல்லது அதிகரிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க, குறைந்தபட்ச ஊதியம் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக கடந்த செவ்வாயன்று ரமணன் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *