ஓர் உறுப்பினர், ஒரு வாக்கு”வாக்களிப்பு முறை மாற்றுவது பரிந்துரைதான் - ஃபாமி பட்சில் !
- Muthu Kumar
- 16 Nov, 2024
புத்ராஜெயா, நவ. 16 -
நடப்பில் இருக்கும் “ஓர் உறுப்பினர், ஒரு வாக்கு" என்ற வாக்களிப்பு முறைக்கு பதிலாக, “ஒரு பேராளர்” எனும் வாக்களிப்பு முறைக்கு மாற்றும் பரிந்துரை குறித்து பரப்பப்பட்டு வரும் வதந்திகளை, பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி பட்சில் நிராகரித்துள்ளார். கட்சியின் நடப்பு வாக்களிப்பு முறையில் அத்தகைய மாற்றம் செய்யப்படுவது குறித்த வதந்திகள் தற்போது பரவலாக பரப்பப்பட்டு வருவது தொடர்பில் கருத்துரைக்கும்போது ஃபாமி பட்சில் இதனைத் தெரிவித்தார்.
நடப்பில் உள்ள “ஓர் உறுப்பினர், ஒரு வாக்கு" எனும் வாக்களிப்பு முறைக்கு பதிலாக, “ஒரு பேராளர்” எனும் வாக்களிப்பு முறைக்கு மாற்றுவது குறித்து முடிவு ஏதும் செய்யப்படவில்லை என்று, புத்ராஜெயாவில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், தொடர்புத்துறை அமைச்சருமான ஃபாமி பட்சில் தெரிவித்தார். “அதுபோன்ற தகவல் உங்களுக்கு உறுதிப்படத் தெரியவில்லை என்றால், மற்றவர்களுக்கு அதை பகிராதீர்கள். இதன் தொடர்பில் நான் பல புகார்களைப் பெற்றிருக்கின்றேன்.
கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் எனும் முறையில், இதன் தொடர்பில் முடிவு ஏதும் செய்யப்படவில்லை என்பதையும் என்னால் உறுதிப்படுத்த முடியும். “இதுவரையில் நடந்திருப்பது விவாதங்கள்தான். ஆனால், இறுதி உடன்பாடு இன்னும் காணப்படவில்லை” என்று ஃபாமி பட்சில் தெரிவித்தார். கட்சித் தேர்தலில் வாக்களிக்கும் முறை, பேராளர் முறைக்கு மாற்றப்பட வேண்டும் என்ற ஒரு பரிந்துரையை, பிகேஆர் கட்சியின் ஓர் உயர்மட்டத் தலைவர் செய்திருப்பதாக, இதற்கு முன்னர் கட்சிக்குள்ளேயே வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன.
'ஓர் உறுப்பினர், ஒரு வாக்கு' எனும் முறை, நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளினால் பின்பற்றப்பட்டு வருகிறது. அத்தகைய வாக்களிப்பு முறை பிகேஆர் கட்சியின் சில தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *