மலாக்கா தேர்தலில் 21 தொகுதிகளில் பாரிசான்; 7 தொகுதிகளில் பாஸ் கூட்டணி போட்டி
- Shan Siva
- 22 Oct, 2026
கோலாலம்பூர், அக் 22: வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 21 தொகுதிகளில் தேசிய முன்னணியும், எஞ்சிய 7 தொகுதிகளில் பாஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தேசிய முன்னணித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இதனைத் தெரிவித்தார். அம்னோ தலைவருமான அவர், மலாக்கா தேர்தலில் பாஸ் கட்சியுடனும், முன்னதாகப் பதிவு நீக்கம் செய்யப்பட்ட பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் இடம்பெற்ற அதன் தோழமைக் கட்சிகளுடனும் இணைந்து செயல்படவுள்ளதாகக் கூறினார்.
இதில், எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் தலைமையிலான வவாசான் கட்சியும் இடம்பெறுகிறது.
தேசிய முன்னணி 21 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், பாஸ் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் எஞ்சிய 7 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
மலாக்கா தேர்தலில் தேசிய முன்னணியும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியும் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளும் என கடந்த சில வாரங்களாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில், தேசிய முன்னணி 21 தொகுதிகளிலும், பக்காத்தான் ஹராப்பான் 5 தொகுதிகளிலும், பெரிக்கத்தான் நேஷனல் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
பாஸ் கட்சி எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதை அந்தக் கட்சியே முடிவு செய்யும் எனக் கூறிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, தேசிய முன்னணி தனது சொந்தச் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

