பாசிர் கூடாங் துறைமுகத்தில் 11.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கொக்கோ கொட்டைகள் பறிமுதல்!
- Shan Siva
- 06 Oct, 2026
கோலாலம்பூர், அக் 6: ஜொகூர் மாநிலத்தின் பாசிர் கூடாங்
(Pasir Gudang) துறைமுகத்தில், சனிக்கிழமையன்று கொள்கலன் (container)
ஒன்றின் மூலம்
நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 11.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 637 டன் கொக்கோ கொட்டைகளை மலேசிய எல்லைக்
கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு முகமையான MCBA பறிமுதல் செய்தது.
பிற்பகல் 3.50 மணியளவில் முகமையின் அமலாக்க அதிகாரிகள்
மேற்கொண்ட சோதனையின்போது இந்தக் கொக்கோ கொட்டைகள் கண்டறியப்பட்டதாக அந்த முகமை
வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உகாண்டாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தக் கொக்கோ கொட்டைகள் 9,100 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்தன.
இக்கொக்கோ
கொட்டைகளின் மதிப்பு 11,886,444.72 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முழுமையற்ற ஆவணங்களுடன் இவை இறக்குமதி செய்யப்பட்டிருந்தது சந்தேகத்தை எழுப்பியது.
எனவே, மேலதிக விசாரணைக்காக அந்தச் சரக்குகள் அனைத்தும் பறிமுதல்
செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் நுழைவுப்
புள்ளிகளில் முரண்பாடான தகவல்களை அளிப்பது அல்லது அவ்வாறு செய்ய முயற்சிப்பது,
'மலேசிய
தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வுச் சேவைகள் சட்டம் 2011'-இன் பிரிவு 13-ன் கீழ் குற்றமாகும் என்று MCBA
தெரிவித்துள்ளது.
இப்பிரிவின் கீழ்
குற்றவாளி என நிரூபிக்கப்படுபவர்களுக்கு 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டு
ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும்
இக்குற்றத்தைச் செய்தால் 75,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை
சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

