சிங்கப்பூருக்குள் நுழைய 41,800 பேருக்கு 'நோ என்ட்ரி'!

top-news
FREE WEBSITE AD

தகுதியற்ற பயணிகள் நாட்டிற்குள் வருவதை தடுக்கும் விதமாக ஜனவரி மாதம் முதல் "நோ போர்டிங் டைரக்டிவ்' என்ற உத்தரவை சிங்கப்பூர் அமல்படுத்த உள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் , ஸ்கூட், எமிரேட்ஸ், டர்கிஷ் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஏசியா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிறுவனங்கள் இந்த உத்தரவை ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தத் தொடங்கும். இந்தச் சோதனைகள் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் வழியாக வருவோருக்கு பொருந்தும். மேலும், 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கூடுதல் விமான நிறுவனங்களும் இதில் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.ஏ (ICA) தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளில் சுமார் 41,800 வெளிநாட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டை விட சுமார் 26 சதவீதம் அதிகமாகவும், 2023 -ஆம் ஆண்டை விட 46 சதவீதம் அதிகமாகவும் உள்ளது.

சிங்கப்பூருக்குச் செல்ல விரும்பும் பயணிகள், விமான டிக்கெட் எடுப்பதற்கு முன், ஐ.சி.ஏ தளத்தின் (ICA Feedback Channel) வழியாக நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஐ.சி.ஏ தளத்தின் மூலம் தரவுகள் சரிபார்க்கப்பட்ட பின் விமான நிலையத்திற்கு போர்டிங் வழிமுறைகள் வரும். அதில் தகுதியில்லாத பயணிகள் செக்இன் நேரத்தில் நிறுத்தப்படுவார்கள்.

பயணிகளுக்கு நுழைவு மறுக்கப்பட்டதற்கு சோதனைச் சாவடிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்பு அடுக்குகளே காரணம் என ஐ.சி.ஏ (ICA) தெரிவித்துள்ளது. இதில், போலி ஆவணங்களை கண்டறியும் வசதியுடன் கூடிய தானியங்கி குடிவரவு வழித்தடங்கள் மற்றும் முகம், கண் கருவிழி அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பயோமெட்ரிக் சோதனைகள் அடங்கும்.

இந்த அமைப்புகள் குற்றச்செயல் அல்லது பாதுகாப்பு காரணங்களால் தடைசெய்யப்பட்ட பயணிகளை கண்டறியக்கூடியவை ஆகும். மேலும், முன்கூட்டியே பெறப்படும் பயணிகள் தகவல்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு மூலம் தகுதியற்ற பயணிகள் அடையாளம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் மேற்கொள்ளும் இந்த அணுகுமுறையை ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிக ஆபத்துள்ள பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *