தங்களை மாவீரர்கள்போல் ஜொகூர் அமானா காட்டிக் கொள்ளக்கூடாது-அப்துல் ஹலீம்!
- Muthu Kumar
- 06 Nov, 2024
கோலாலம்பூர், நவ.6-
வரும் சட்டமன்றத் தேர்தலில் அமானா கட்சியை எதிர்கொள்ள ஜொகூர் அம்னோ தயாராக உள்ளது என்று அம்மாநில அம்னோ செயலாளர் அப்துல் ஹலீம் சுலைமான் சூளுரைத்துள்ளார். அடுத்த மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் இருபது தொகுதிகளில் போட்டியிட அமானா நோக்கம் கொண்டுள்ளது என்று பக்காத்தான் ஹராப்பானின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான அமானா அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பு பற்றி நேற்று கருத்துரைத்த அப்துல் ஹலீம், கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜொகூர் மாநிலத்தில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அதன்பின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் அமானா வெற்றி கண்டதை ஓர் அதிர்ஷ்டம் என்றே அக்கட்சி கருதிக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அந்த வெற்றிகூட அமானாவின் சொந்தப் பலத்தில் கிடைத்த வெற்றி அல்ல. மாறாக, ஜொகூரில் ஜசெகவின் பலத்தால் கிடைத்த வெற்றியாகும் என்றார் அப்துல் ஹலீம்.
ஜொகூர் அமானா ஆணவத்துடன் நடந்து கொள்ளக்கூடாது. பக்காத்தான் ஹராப்பானின் பங்காளிக் கட்சி என்பதால்தான் ஜசெகவின் ஆதரவுடன் அது வெற்றிபெற முடிந்தது. ஆகவே, தங்களை மாவீரர்கள்போல் ஜொகூர் அமானா காட்டிக் கொள்ளக்கூடாது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அல்லது பதினாறாவது பொதுத்தேர்தலில் அமானாவுடன் மோத அம்னோ தயாராக உள்ளது. ஆனால், அரசியல் செய்ய இது சரியான தருணம் அல்ல என்றார் அவர்.
ஜொகூரில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க தேசிய முன்னணி மறுத்திருப்பதால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 12 முதல் 20 இடங்கள் வரை ஜொகூர் அமானா போட்டியிடப் போவதாக ஜொகூர் அமானாவின் துணைத் தலைவர் ஸூல்கிப்ளி அமாட் நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *