BN - PN தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்?! அரசியல் ஆய்வாளர்கள் கருத்து!
- Shan Siva
- 27 Nov, 2026
கோலாலம்பூர், நவ 27: மலேசிய அரசியலில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் இடையிலான அரசியல் ஒத்துழைப்பில் புதிய சிக்கல்கள் உருவாகக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அடுத்த பொதுத்தேர்தலை முன்னிட்டு, தங்களின் பாரம்பரியத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று அம்னோ உள்ளிட்ட பாரிசான் நேஷனல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்ற தொகுதிகளிலும் அம்னோ உரிமை கோருவது, இரு கூட்டணிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.
சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் சியாஸா ஷுக்ரி, தற்போதைய அரசியல் சூழலில் அம்னோ தனது பழைய அரசியல் ஆதிக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளைக் கோர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அம்னோவும் பாஸ் கட்சியும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழல் உருவாகலாம் என்றும் மற்றொரு அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹசான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் அடுத்த பொதுத்தேர்தலில் மலாய் வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

