கெரிக்கில் கோர விபத்து! நால்வர் பலி
- Shan Siva
- 05 Oct, 2026
கோலாலம்பூர், அக் 5:பேராக் மாநிலம், கெரிக்கில் (Gerik) நிகழ்ந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த அவர்கள் பயணித்த கார், எதிர் திசையில் வந்த லாரி மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில், தாசே பந்திங் (Tasik Banding) அருகே உள்ள கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் (East-West Highway) பெரோடுவா ஆக்சியா (Perodua Axia), ஹினோ (Hino) லாரி மற்றும் ப்ரோட்டான் பெர்சோனா (Proton Persona) ஆகிய வாகனங்களுக்கு இடையே இந்த விபத்து ஏற்பட்டதாக பேராக் மாநிலக் காவல் துறைத் தலைவர் அல்வி ஜைனல் அபிடின் தெரிவித்தார்.
19 வயது இளைஞர் ஒருவரால் ஓட்டப்பட்ட அந்த ஆக்சியா காரில், 31 வயது ஆண், 40 வயது பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என மொத்தம் நான்கு பயணிகள் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் கெரிக்கிலிருந்து கிளாந்தான் மாநிலத்தின் ஜெலி (Jeli) பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அதே நேரத்தில், 20 வயது இளைஞர் ஓட்டிய பெர்சோனா காரில் மூன்று பயணிகள் ஜெலியிலிருந்து கெரிக் நோக்கி வந்து கொண்டிருந்தனர்; அதே திசையில் 42 வயது நபர் ஓட்டிய லாரி ஒன்றும், அவருடன் 34 வயது உதவியாளர் ஒருவரும் சென்று கொண்டிருந்தனர்.
ஆக்சியா கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைப் பாதைக்குச் சென்று, பெர்சோனா காரின் பின்புறத்தில் மோதியதுடன், அதன் பின்னால் வந்த லாரியின் முன்பகுதியிலும் மோதியதாகக் கருதப்படுகிறது. இந்த மோதலின் தாக்கத்தால் ஆக்சியா கார் லாரியின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்டது; லாரி அதனை சுமார் மூன்று முதல் ஏழு மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றது என்று அல்வி தெரிவித்துள்ளார்.
ஆக்சியா காரில் இருந்தவர்களில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொரு குழந்தைக்குக் கடுமையான காயம் ஏற்பட்டதாகவும் அல்வி கூறினார். பெர்சோனா காரின் ஓட்டுநர் மற்றும் பயணிகள், அத்துடன் லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

