வடகிழக்கு பருவமழை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- துணைப் பிரதமர்!
- Muthu Kumar
- 06 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 6 -
கனத்த மழையை பொழியச் செய்யும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களை குறிப்பாக, வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்படக் கூடிய சாத்தியம் அதிகமுள்ள பகுதிகளில் வசிப்போருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கிய இவ்வாண்டுக்கான வடகிழக்கு பருவமழை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீடிக்க விருக்கிறது.இக்காலகட்டத்தில் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரத் தரப்பினரின் அறிவுரைகளை அவசியம் பின்பற்றுமாறு, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் ஏற்படக் கூடிய எந்த ஒரு எதிர்மறையான சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பெரு மழையினால் வெள்ளம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதால், தீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலங்கள், சபா மற்றும் சரவாக்கில் தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளுக்கு அருகில் வசிப்போர் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று, தேசிய பேரிடர் நிர்வாகக் குழுத் தலைவருமான ஸாஹிட் கேட்டுக் கொண்டிருக்கின்றார். வடகிழக்கு பருவமழையின் தொடக்க மாதங்களான நவம்பர் மற்றும் டிசம்பரில் கிளந்தான்,திரெங்கானு, பகாங், ஜொகூர், சபா மற்றும் சரவாக்கில் கடும் மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, மலேசிய வானிலை ஆய்வு இலாகா (மெட்மலேசியா) தலைமை இயக்குநர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் இம்மாதம் ஒன்றாம் தேதி கோடிகாட்டியிருந்தார்.
2025ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி பிப்ரவரி வரையில் மீண்டும் பகாங், ஜொகூர், சபா மற்றும் சரவாக்கில் கடுமையாக மழை பெய்யக் கூடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *