நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி நால்வர் பலி!
- Shan Siva
- 27 Sep, 2026
கோலாலம்பூர், செப் 27: கோத்த கினபாலுவில் உள்ள ஜலான் செப்பாங்கர், தமன் ஜெயா டிரி (Taman Jaya Diri) பகுதியில், இன்று அதிகாலை சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து டன் லாரி மீது, தாங்கள் பயணித்த பெரோடுவா விவா (Perodua Viva) கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் நான்கு ஆண்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்த அவசர அழைப்பு அதிகாலை 2:37 மணிக்குக் கிடைத்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.
கோத்த கினபாலு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர், லிந்தாஸ் (Lintas) நிலையத்தின் உதவியுடன் அதிகாலை 2:59 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்; அப்போது நான்கு பேரும் வாகனத்திற்குள் சிக்கியிருந்ததைக் கண்டனர்.
அனைவரும் உயிரிழந்துவிட்டதை மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் சிறப்பு மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி அவர்களை வாகனத்திலிருந்து வெளியே எடுத்தனர்.
பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் பணி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நிறைவடைந்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

