பகுதி 4 (ஆரண்ய காண்டம்)
- Surendran Sumdraraj
- 14 Aug, 2026
பஞ்சவடியில் வஞ்ச மகள்
பஞ்சவடி என்னும் பசுமையான சோலை, கோதாவரி நதிக் கரையில் இருந்தது; அது சான்றோர் படைக்கும் கவிதை போலத் தெளிவும் நிறைவும் பெற்று விளங்கியது; கண்ணைப் பறிக்கும் மணிகளை யும், மின்னல் போல் ஒளிவிடும் பொன்னையும், பெண்ணின் பற்களைப் போல் வெண்மையான முத்துக்களையும் வாரிக் கொண்டு வந்து ஐவகை நிலங்களில் குவித்தது; நீரால் அந் நிலங்களை வளப்படுத்தியது. அதன் ஒட்டம் இவர்களின் நாட்டத்தைக் கவர்ந்தது. பத்தினிப் பெண்ணோடு இராமன் அங்கு இனிமையாய்க் காலம் கழித்தான். இயற்கை அவர்களுக்கு வியப்பைத் தந்தது.
பால் நிலவைக் கண்ட சீதையும், இராமனும் தேனிலவை கண்டது இல்லை. இங்கு ஏன் என்று கேட்பார் அற்று, வண்ணப் பறவைகளையும் வனத்து விலங்கு களையும் அவற்றின் நேய உறவுகளையும் கண்டு அவற்றோடு அவளை ஒப்பிட்டு இராமன் நலம் பாராட்டினான். தாமரை மலரில் இரண்டு சக்கரவாகப் பறவைகள் தங்கி இருந்தன. அவை சீதையின் அழகிய வடிவை அவனுக்கு நினைவுப்படுத்தின. மணற்குன்றுகள் இராமன் தோள்களாக விளங்கின. அன்னப் பறவைகள் சீதையின் நடையைக் கற்றன. களிறுகள் இராமன் பெருமிதத்தைக் கண்டு ஒதுங்கின. வஞ்சிக் கொடி இடைக்குத் தோற்றது. தாமரையின் நிறம், மங்கிக் காட்சி அளித்தது. அன்புக் காட்சிகள் அவர்களுக்கு மவுன ராகமாய் இசைத்தன. அழகுக்கும் இனிமைக்கும் பங்கமில்லாது அந்தச் சோலையில் இலக்குவன் வடித்துத் தந்த குடிசையில் தங்கி இருந்தனர்.
இலங்கைக்கு அரசன் இராவணன் ஒரே தங்கை சூர்ப்பனகை அங்கு வந்து சேர்ந்தாள். அப் பருவ மங்கை இராமன் உருவில் மயங்கினாள். அரக்கியாகச் சென்றால் “கிறுக்குப் பெண் என்று நறுக்குவர் என அரம்பை வடிவில் அவன்முன் நின்றாள்; திருமகளைத் தியானிதித்து அவள் உருவைத் தான் பெற்றுக் காட்சி அளித்தாள்.
பஞ்சுஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியளாகி
அஞ்சொல்இள மஞ்ஞைஎன அன்னமென மின்னும்
வஞ்சிஎன நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”
செம்பஞ்சு பூசிய சிவந்த அடிகள், தாமரை மலரைப் போலக் காட்சி அளிக்க அன்ன நடையும், வஞ்சிக் கொடி போன்ற மின்னல் இடையும் கொண்டு நஞ்சு எனத் தகைய வஞ்ச்மகள் நடன சிங்காரியாக நளினமாக அவன் முன் வந்து நின்றாள். விண்ணவர் படைத்த அமுதம் போன்ற கண்கவர் கன்னியைக் கண்டு இராமன் வியந்தான். “காட்டு வாழ்க்கையில் மேட்டுக் குடிமகள் இவள் யார்?” என அறிய விழைந்தான்.
பதுமைபோல வந்த அப் புதியவளைப் பார்த்து, “ஆரணங்கே நீ யார்? வழி தெரியாமல் உன் விழிகள் இங்கு வந்து நோக்குகின்றனவா?” என்று பரிவுடன் வினவினான். வாய்ப்பை எதிர்பார்த்து அவள் வாய்மையை மறைத்துப் பொய்மையைப் புனைவுடன் கூறினாள்.
“நான் அளகை நகர்க் காவலன் குபேரனுக்கும் இலங்கை வேந்தன் இராவணனுக்கும் தங்கை; அழகு மிக்கவள் ஆகலின், என்னைக் ‘காமவல்லி’ என்று அழைப்பர்”.
“அரக்கர் குலத்தில் அரம்பை எப்படி அவதரிக்க முடியும்”? என்று கேட்டான் இராமன்.
“சேற்றில் முளைத்த செந்தாமரை நான்” என்றாள்.
“நிலத்தில் வந்தது ஏன்?”
“நிம்மதி இழந்ததால்; உன் சம்மதம் வேண்டி உன்னை மணக்க” என்றாள்.
“நீ மலைத்தேன்; நான் முடவன்” என்றான்.
“காதலித்தேன்; அதனால் என்னைக் குருடி என்பர்”.
“சாதி ஒரு தடை” என்றான்.
“நான் கலப்பு மகள்; இது என் பிறப்பு வரலாறு” என்றாள்.
“என் தாய் அரக்கி; தந்தை அந்தணன்” என்றாள்.
“அரக்கி நீ; மானுடன் நான்” என்றான்.
“இடைப்பட்ட நிலையில் தேவ மகளாக உன்னைச் சந்திக்கிறேன்” என்றாள்.
“நீ சீமாட்டி; நான் சீர் இழந்த நாடோடி” என்றான்.என்னை மணந்தால் நீ நாடாள்வாய்” என்றாள்.
“உன் பெற்றோர்” என்று தொடர்ந்தான்.
“தடை செய்ய மாட்டார்கள்; காந்தருவ மண்ம் என்று ஒன்று இருக்கிறது; அது காதலர்க்குத் தரப்பட்ட உரிமை” என்றாள்.
அளவோடு நகையாட விரும்பினான் இராமன்.
“என் தந்தையை நான் வாழ்த்துகிறேன்; அவர் என்னைக் காட்டுக்கு அனுப்பாவிட்டால் நீ எனக்கு எட்டாத கனியாக இருந்திருப்பாய்; அழகு மிக்க உன்னைச் சந்திக்கும் பேறு பெற்றேன்; நன்மை என்னை வந்து அடைந்திருக்கிறது” என்றான்.
அவன் பேசிய எள்ளல் உரையை உள்ளம் உவந்து சொன்ன ஏற்புரையாகக் கொண்டாள் அவள். “மீன் தூண்டிலில் விழுந்துவிட்டது” என்று நினைத்தாள். “விரித்த வலை வீண் போகவில்லை” என்று செருக்குக் கொண்டாள். சீதை என்னும் பெண் கொடி, அங்கு வேலியாக வந்து தடுப்பாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
பொன்னை நிகர்த்த சீதை, நீல நிறத்தவனான இராமனைத் தழுவிக் கொண்டு நின்றாள். மேகத்தில் மின்னல் தோன்றியது. சூர்ப்பனகையின் சொற்களில் இடி தோன்றியது. கண்களில் நீர் பொழிய மழையை யும் கொண்டு வந்து சேர்த்தாள்.
“சிவபூசையில் சிந்தனையின்றிப் புகுந்த கரடி இவள் யார்'? என்று கேட்டாள்;
“இளைஞர் இருவர் புனையும் காதல் கவிதையின் இடையில் புகுந்த போட்டிக் கவிதை யாது”? என்று வினவினாள்; இது இடைப்பிறவரல் என்று நினைத்தாள்.
“இவள் அரக்கி மகள், மானுடவடிவில் வந்து உன்னை மயக்குகிறாள்; இவளை அகற்று; அடித்துத் துரத்து” என்று ஆணையிட்டாள்.
அதிகமானால் அமுதம் நஞ்சாக மாறிவிடும் என்பதை அறிந்தான் இராமன்; விளையாட்டு வினையாக மாறுகிறது; என்பதை உணர்ந்தான்.
“இவள் என் மனைவி; வாழ்க்கைத் துணைவி” என்று சொல்லாமல் செய்கையால் அறிவுறுத்தினான்; சீதையை அழைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே பர்ணசாலையில் நுழைந்தான்.
“தம்பி நயவு காட்டமாட்டான்; என்னை நம்பி இங்கு இருக்க வேண்டா'” என்று கூறிவிட்டு அவளை விட்டு அகன்றான்.
“இன்று போய் நாளை வருகிறேன்” என்று கூறி விட்டு அவ் அரக்கி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள். பொழுது சாய்ந்தது. உள்ளத்தில் வெறுமை நிறைந்தது. இரவு நீண்டதாக அவளுக்கு இருந்தது. பொழுது விடிவில் தன் விடிவைக் காணக் காத்துக் கிடந்தாள். எப்படியாவது அவனை அடைவது என்று உறுதி கொண்டாள். இருள் அவளுக்கு மருளினைத் தந்தது. விரகவேதனையால் நரகவேதனையை அடைந்தாள்.
உறக்கம் நீங்கிய இராமன் காலையில் தன் கடனை முடிக்கக் கோதாவரிக் கரையை அடைந்தான். நித்தியக் கடனை முடித்து இறைவனை வழிபட்டு நிறை உள்ளத்தோடு வீடு திரும்பினான். அவன் புத்தம் புதுப் பொலிவோடு விளங்குவது அவள் பெருவிருப்பைத் தூண்டியது. சீதை குறுக்கிட்டதால் அந்தப் பேதை தன்னைத் துறந்தான் என்று தவறாகக் கணக்குப் போட்டாள். அவள் வாழ்க்கை, ஒருதலை ராகமாக மாறியது; அவள் ஒரு தறுதலையாக மாறினாள்.
சீதை அவளுக்கு நந்தியாகக் காணப்பட்டாள். மந்தி போன்ற அவள் நந்தியாகிய சீதைமீது பாய்ந்து மறைத்து விடுவது என்று துணிந்தாள்.
காவல் செய்து காத்துக் கிடந்த காகுந்தன் தம்பியை அவள் கவனிக்கவில்லை; ‘தனித்து இருக்கிறாள்’ என்று துணிந்து அவளைப் பற்றி இழுக்க முயன்றாள். மெய்ப்படைக் காவலன்போல இருந்த இலக்குவன் அவள் செய்கை பொய்ப்படும்படி அவள் மயிர் முடியைக் கரத்தால் பற்றி அவளைக் ‘கரகர’ என்று இழுத்து வெளியேவிட்டான். ‘முதலுக்கு மோசம் வந்துவிட்டது' என்று கூறும்படி இலக்குவனையே அவள் கைப்பற்றி அந்தரத்தில் இழுத்துச் செல்லப் பார்த்தாள். அந்த்ச் சுந்தரத் தோளனுக்கு அவளை அழித்து ஒழிப்பதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை. “பெண் கொலை புரிந்தால் மண்ணுலகம் அவனைப் பழிக்கும்” என்பதால் தயக்கம் காட்டினான்; உயிரைப் பிரிக்க விரும்பவில்லை. அவளுக்குத் தக்க பாடம் கற்றுத்தர விரும்பினான்.
“அழகு காட்டி தன் அங்கங்களால் மயக்க முற்படுகின்றவளின் அழகைக் குலைப்பதே செய்யத் தக்கது” என்ற முடிவுக்கு வந்தான். மூக்கும் செவியும் முகத்துக்கு அழகு தருவன. வளம் மிக்க இளமையைக் காட்டும் நகில் அவளுக்கு ஆணவத்தை உண்டாக்கி இருக்கிறது. மூக்கையும் செவியையும் முன அறுத்தால் அது அவள் நாக்கை அடக்கும் என்று உறுதி கொண்டான். “வலிதிற் பற்றும் வாலிப மங்கையாகிய அவள் அங்க இலக்கணம் பங்கம் அடைதல் தக்கது” என்று மூக்கையும் செவியையும் மூளி ஆக்கினான்; குருதி கொட்டியது; அருவி வடியும் மலைபோலக் காட்சி அளித்தாள்; அரக்க வடிவம் அவளைக் காட்டிக் கொடுத்தது.
கருப்பு நிறக்காரிகை விருப்பு மிகச் சிவப்பு நிறம் பெற்றாள்; செக்கர் வானம் படிந்த செம்மலையானாள்; செம்மலை அடையச் சிவந்த அவ்வடிவம் பயன்படும் என்று கருதினாள்.
நதி நீராடி இறைவழிபாடு செய்து நிறை மனத்தோடு வீடு திரும்பிய இராமன் குறையுற்ற இந் நங்கையைக் கண்டான். அவளும் சூரியனைக் கண்ட தாமரை போல் உவகை கொண்டாள். அவள் அவன் கண்ணில் பட்டாள். நடந்ததை அவள் போக்கிலேயே அவன் தெரிந்து கொண்டான்; இது தம்பியின் சித்திர வேலைப்பாடு என்பதை அறிந்து கொணசென்றான்.றுப்பிழந்த நிலையிலும் அவள் உள்ளம் குலையவில்லை. “விருப்புற்றுக் கேட்கிறேன்; என்னை ஏற்றுக் கொள்” என்றாள்; “பொறுப்பற்ற உன் சொல் உன்னை அரைகுறை அழகி ஆக்கிவிட்டது. அறுவைச் சிகிச்சை நடந்தும் அறிவு பெறாத வளாய் இருக்கிறாய்; தீயவளே விலகு என்றான்.
அவள் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும் மீண்டும் வேண்டினாள்.
“இராவணன் பொல்லாதவன்; அவன் தங்கை நான்; அங்கம் அறுத்த உங்களை உயிரோடு தங்க வைக்க மாட்டான்; இது உறுதி”.
“நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டால் அரக்கர் அழிவிற்குத் துணையாய் நான் இருப்பேன்”.
“நீ ஏற்கனவே மணமானவன்; அதனால் என்னை ஏற்க மறுக்கலாம்; உன் தம்பிக்கு என்னை ஏற்றுக் கொள்ளச் சொல்”.
“எனது மூக்கை அறுத்துவிட்டீர்; என்னை நீர் ஏற்றுக் கொண்டால் மூக்கை மறுபடியும் உண்டாக்கிக் கொள்வேன்; முழு அழகையும் பெறுவேன்; அதிக மான நெடிய மூக்கும் மடந்தையர்க்கு மிகைதானே”.
“பெண்ணுக்கு மிகைப்பட அழகும் பகையாய் முடியும்; குடும்பப் பெண்ணுக்குக் கொண்டானை மகிழ்விக்கும் உரு இருந்தால் போதாதோ!”
“மூக்கு அழகு என்பதால் பிறர் என்னை நோக்கு வர்; அது விருப்பை ஊக்குவிக்குமல்லவா? என்மீது கொண்டுள்ள பிரியத்தால் மூக்கு அறுத்தீர் ஆதலின், உம்மிடம் என் அன்பு இருமடங்கு ஆகிறது”.
“அறுபட்ட மூக்கு உடையவளோடு எப்படி வாழ்வது? என்று உன் தம்பி திகைக்கலாம்; நீ விடுபட்ட இடையை உடைய மெல்லியலோடு சேர்ந்து வாழ வில்லையா? இராவணனை அழிப்பதில் உங்களுக்கு உற்ற துணையாவேன்; என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று தொடர்ந்து தொல்லைகள் தந்தாள். அதற்கு ஒர் எல்லை காண விரும்பினர். அதனால் வில்லை வளைத்து அம்பு தொடுக்க இளயவன் இராமன் ஆணையை எதிர் நோக்கி நின்றான். “இனி இங்கிருந்து பல்லைக் காட்ட முடியாது” என்று உணர்ந்த சூர்ப்பனகை பழி தீர்க்கும் படலத்துக்குச் சென்றான்.
லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



