அஹ்மட் ஜாஹிட் வழக்கு: மேல்முறையீட்டுக்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி

top-news

புத்ராஜெயா, அக். 8: யயாசான் அகால்புடி அறக்கட்டளை தொடர்பான 47 குற்றச்சாட்டுகளின் வழக்குத் தொடரை நிறுத்திய அரசுத் தரப்பு முடிவுக்கு எதிராக மலேசிய வழக்கறிஞர் சங்கம் தொடர்ந்த நீதித்துறை மறுஆய்வு வழக்கில், மேல்முறையீடு செய்ய அட்டர்னி ஜெனரல் மற்றும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

மலேசிய வழக்கறிஞர் சங்கம் நீதித்துறை மறுஆய்வைத் தொடர அனுமதித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இந்த இரண்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடந்த மே 7-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம், அஹ்மட் ஜாஹிட்டுக்கு எதிரான 47 குற்றச்சாட்டுகளின் வழக்குத் தொடரை நிறுத்திய அட்டர்னி ஜெனரலின் முடிவை சவாலுக்கு உட்படுத்த வழக்கறிஞர் சங்கத்துக்கு அனுமதி வழங்கியிருந்தது.

மலாயா தலைமை நீதிபதி டத்தோ ஸ்ரீ ஹாஷிம் ஹம்சா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மேல்முறையீட்டு அனுமதி கோரிய இரு மனுக்களையும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கு புதிய அரசியலமைப்புச் சட்டக் கேள்விகளையும் பொதுநல முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களையும் எழுப்புவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

குறிப்பாக, கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 145(3)-ன் கீழ் அட்டர்னி ஜெனரலுக்கு வழங்கப்பட்டுள்ள வழக்குத் தொடரும் அதிகாரத்தை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு கோரப்படும் போது, அதற்கான அனுமதி அளவுகோல் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே முக்கியமான சட்டக் கேள்வியாக உள்ளதாக ஹாஷிம் கூறினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *