பாஸ் உலமா மாநாட்டில் அம்னோ உலமா மன்றத் தலைவர் பங்கேற்பு – இரு கட்சிகளின் ஒத்துழைப்புக்கு நல்ல தொடக்கம்
- Surendran Sumdraraj
- 03 Sep, 2026
கோத்தா பாரு, செப். 3 –
பாஸ் கட்சியின் உலமா பிரிவு ஆண்டு மாநாட்டில் அம்னோ உலமா மன்றத் தலைவர் டத்தோ துசுகி அகமது இன்று கலந்து கொண்டார். இந்த பங்கேற்பை, அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நல்ல தொடக்கமாக அவர் வர்ணித்துள்ளார்.
கோத்தா பாருவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் துசுகியுடன் அவரது துணைத் தலைவர் டத்தோ டாக்டர் கைருதீன் அமான் ரசாலி, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வவாசான் கட்சியின் பிரதிநிதி அல்மிடி ஜாஃபர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பாஸ் கட்சியின் உலமா பிரிவின் ஆண்டு மாநாட்டை அக்கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து துசுகி அகமது கூறுகையில், பாஸ் உலமா பிரிவின் அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததற்கு தாம் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
இரு கட்சிகளின் உலமா பிரிவுகளுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்படுவதற்கும் இந்த சந்திப்பு வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் உறவு கடந்த காலங்களில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ள நிலையில், இந்த மாநாட்டில் அம்னோ பிரதிநிதிகள் பங்கேற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



