14 வயது மாணவி தற்கொலை: முழுமையான விசாரணை தேவை
- Surendran Sumdraraj
- 21 Aug, 2026
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூரில் பள்ளியில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் காமில் முனிம் அழைப்பு விடுத்துள்ளார்.
காமில், அந்த மாணவியின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, இனவெறித் தொனியிலான கருத்துக்கள் உட்பட, வாய்மொழித் துன்புறுத்தல் நடந்திருக்கலாம் எனச் சுட்டிக்காட்டும் ஆரம்பகட்ட அறிக்கைகள் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இருப்பினும், இந்த விவகாரம் இன்னும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், எந்தவொரு முடிவுகளையும் முன்கூட்டியே எடுக்கவோ அல்லது பழியைச் சுமத்தவோ கூடாது என்றும் அவர் கூறினார்.
முழுமையான, வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணையோடு, ஒவ்வொரு சாத்தியக்கூறையும் ஆராய்ந்து, அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, உண்மை கண்டறியப்படுவதை உறுதிசெய்ய வேண்டும், என்று அவர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
பள்ளி என்பது ஒரு குழந்தை பாதுகாப்பாகக் கற்று, ஒரு மனிதனாக உருவெடுக்கும் இடமாக இருக்க வேண்டும்; அது, ஒருவரின் தோல் நிறம் மற்றும் பரம்பரையின் காரணமாக மற்றவர்களை வெறுக்கக் கற்றுக்கொள்ளும் இடமாக இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
குழந்தைகளிடையே ஏற்படும் இனரீதியான ஏளனங்களை பாதிப்பில்லாதவை என்று புறக்கணிக்காமல், அவற்றை தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுக்கு காமில் அழைப்பு விடுத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



