1 லட்சம் இழப்பு ஏற்படுத்திய கேபிள் திருட்டுக் கும்பல்கள் சிக்கினர் – 7 பேர் கைது

top-news

தெமெர்லோ, செப் 21-

 தெமெர்லோ மற்றும் மென்தகாப் பகுதிகளில் பயன்பாட்டு கேபிள்களைத் திருடி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மூன்று கும்பல்களைப் போலீசார் முறியடித்துள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவங்களால் சுமார் RM100,000 இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஏழு பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கேபிள் திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் குழுக்கள் ‘கெங் மாட் எலக்ட்ரிக்’, ‘கெங் நிஸ்தா’ மற்றும் ‘கெங் சாசி’ என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெமெர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமது நசீம் பஹ்ரோன் தெரிவித்தார்.

செப்டம்பர் 15 முதல் 19 வரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கைகளில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மற்றும் டெலிகோம் மலேசியா (TM) நிறுவனங்களுக்குச் சொந்தமான கேபிள்கள் திருடப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவின் உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், அவர்களில் ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *