கிளானா ஜெயா LRT வழித்தடத்தில் தண்டவாளம் மாற்றும் பணி ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொள்ளப்படவுள்ளது - பாதிக்கப்படும் இடங்கள் மற்றும் தேதி குறித்து ரேப்பிட் கே எல் விளக்கம்

top-news

கோலாலம்பூர், செப் 9: ரேப்பிட் கேஎல் (Rapid KL) நிறுவனம், கிளானா ஜெயா எல்ஆர்டி (LRT) வழித்தடத்தில் செப்டம்பர் 13 முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை கட்டம் கட்டமாக தண்டவாளத்தை மாற்றும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
இத்திட்டம் ஏழு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்றும், வெவ்வேறு ஞாயிற்றுக்கிழமைகளில் வெவ்வேறு நிலையங்களின் தொகுப்புகள் இதில் பாதிக்கப்படும் என்றும் ரயில் சேவை நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது:

செப்டம்பர் 13, 20, 27, 2026: தாமான் மெலாத்தி, கோம்பாக்

நவம்பர் 15, 22, 29, 2026: யுனிவர்சிட்டி, கெரிஞ்சி, அப்துல்லா ஹுக்கும்

ஜனவரி 10, 17, 24, 2027: டத்தோ கெராமாட், ஜெலாடெக், செத்தியாவங்சா

மார்ச் 14, 21, 28, 2027: யுனிவர்சிட்டி, கெரிஞ்சி, அப்துல்லா ஹுக்கும்

மே 9, 16, 23, 2027: மஸ்ஜித் ஜாமெக், டாங் வாங்கி, கம்போங் பாரு, கேஎல்சிசி (KLCC), அம்பாங் பார்க்

ஜூலை 11, 18, 25, 2027: தாமான் ஜெயா, யுனிவர்சிட்டி, கெரிஞ்சி, அப்துல்லா ஹுக்கும்

செப்டம்பர் 12, 19, 26, 2027: தாமான் மெலாவத்தி, கோம்பாக் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட தேதிகளில் இந்தப் பணிகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

நீண்ட வளைவுப் பாதைகளைக் கொண்ட பகுதிகளில் பணிகளை முடிக்க அதிக காலம் தேவைப்படும் என்றும், அப்பணிகள் அடுத்த நாள் காலை வரை நீடிக்கக்கூடும் என்றும் ரேப்பிட் கேஎல் தெரிவித்துள்ளது.

பட்டியலில் இடம்பெறாத நிலையங்கள் வழக்கமான தினசரி அட்டவணையின்படி தொடர்ந்து செயல்படும் என்றும் அது கூறியது.

பணிகள் நடைபெறும் காலங்களில், பாதிக்கப்பட்ட நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு இயந்திரங்கள் காலை 9.30 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று அது தெரிவித்தது.

பயணிகள் நிலைய கவுண்டர்களில் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்; அதேவேளையில், ராபிட் கேஎல் தயாரிப்புகள் மற்றும் 'டச் என் கோ' (Touch ‘n Go) அட்டை பயன்படுத்துபவர்கள் தங்கள் பயணத்தை வழக்கம் போல் தொடரலாம்.

சேவை பாதிப்பு ஏற்படும் நேரங்களில் பாதிக்கப்பட்ட நிலையங்களை இணைக்கும் வகையில் இலவச ஷட்டில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பயணிகளுக்கு உதவ நிலைய ஊழியர்கள், துணைப் போலீஸார் மற்றும் பிரசாரனா (Prasarana) குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் ரேப்பிட் கேஎல் கூறியது.

குறிப்பாகப் பணிகள் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை காலை வேளைகளில் பயணம் செய்யும் பயணிகள், ரேப்பிட் கேஎல்-இன் இணையதளமான www.myrapid.com.my அல்லது அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிட்டுத் தகவல்களை அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *