ராகுல் காந்தி கைது: ஜனநாயகத்தை நசுக்கும் செயல் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்
- Surendran Sumdraraj
- 22 Jul, 2026
சென்னை, ஜூலை 22-
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக உரிமைகளை ஒடுக்க முயலும் இந்த நடவடிக்கை ஏற்க முடியாதது என்றும், தலைநகரிலேயே ஜனநாயகம் நசுக்கப்படுவது மிகுந்த கவலைக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்களிடம் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார். கருத்து தெரிவிக்கும் உரிமை மற்றும் அமைதியான போராட்ட உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மக்களின் குரலை அடக்க கைது மற்றும் காவல் நடவடிக்கைகளை பயன்படுத்துவது ஜனநாயக நாட்டிற்கு பொருத்தமற்றது என்றும், அரசியல் கருத்து வேறுபாடுகளை சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளால் ஒடுக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஜனநாயக மரபுகளையும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளையும் மதித்து மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



