கிஷ்யந்த காண்டம் - பாகம் 4
- Surendran Sumdraraj
- 30 Oct, 2026
"கால்* செலாது அவன் முன்னர்க், கந்தவேள் கால் = காற்று
வேல் செலாது அவன் மார்பின், வென்றியால்
வால் செலாது வாய் அலது ராவணன்
கோல் செலாது அவன் குடை செலாது அரோ!".
அவ்வளவு வலிமையுடைய வாலியின் முன்பாக காற்றுகூட புகமுடியாது; அவனுடைய மார்பில் கந்தவேளின் வேலும் செல்லாது; அவனுடைய வால் செலாத இடங்களில் அல்லாமல் இராவணனின் ஆட்சி அதிகாரம் செல்லமுடியாது, அதுமட்டுமா, இராவணனின் குடையும் செலாது. வாலி தன்னுடைய இடத்தை விட்டுப் பெயர்ந்து எழும்பிச் செல்லுவானானால் அவனுடன் மலைகள் எல்லாமும் உடன் எழும்; அவன் தோள் மோதினால் அண்டங்கள் மோதிக் கொள்ளும். அன்று, வராக அவதாரமும், கூர்மாவதாரமும் எடுத்த திருமாலோடு ஒப்பிடத்தக்க வலிமையுடையவன் வாலி. அன்று இரண்யனின் மார்பைப் பிளந்த நரசிம்ஹத்தாலும்கூட பிளக்கமுடியாத வலிமை படைத்தவன் வாலி.இரண்யாக்ஷன் எனும் அசுரன் பூமியைச் சுருட்டிக் கொண்டு பாதாளத்துக்குள் சென்று விடுகிறான். தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட, அவர் ஓர் வராகம் (பன்றி) உருவம் எடுத்துக் கொண்டு அந்த அசுரனைப் பின்பற்றி பாதாளத்துக்குள் சென்று, அந்த அசுரனைக் கொன்று, பூமியைத் தன் கொம்பில் ஏந்திக் கொண்டு வந்து முன்போல் நிலை நிறுத்தினார். தேவர்களும், அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்த போது, மத்தாக நடப்பட்டிருந்த மந்தர மலை கீழே ஆழ்ந்து போய்விடாமல் இருக்கத் திருமால் ஒரு பெரிய ஆமை உருவம் எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் இருந்த அந்த மலையைத் தாங்கிக் கொள்கிறார். இந்த இரு அவதார புருஷர்களாக திருமால் வந்தார், அந்த வராகமும், கூர்மமும் கூட இவன் வலிமையோடு ஒப்பிட முடியாது என்று அனுமன் கூறுகிறான்.
ஆதிசேஷன் இந்த பூமியை ஓரிடத்தில் இருந்து கொண்டுதான் தாங்குவான். ஆனால், இந்த வாலியோ நடந்து கொண்டே தாங்குகிறான். கடல் ஓசையிடுவதும், காற்று வீசுவதும், சூரியன் தேரில் சுற்றுவதும் கூட வாலிக்கு இடையூறு இன்றி பயந்துகொண்டுதான் இயங்குகின்றன என்றால், வாலியின் வலிமையைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது? இப்படி வாலியிடம் கொண்ட அச்சத்தினால், உலகில் உள்ள மற்ற உயிரினங்கள் யாவும், அவனது கருத்துக்கு மாறுபாடின்றி அவனுடன் ஒன்றுபட்டு உயிர்பிழைத்து வருகின்றன. இந்த வாலியின் வால் இருக்கிறதே, அதன் மகிமையைக் கூறுகிறேன், கேளுங்கள்! ஒரு சமயம் வாலி மாலை நேரத்தில் கடற்கரையருகே சாயங்கால சந்தி முதலான நியமங்களைச் செய்துகொண்டு இருந்தபோது, இராவணன் அவன் அறியாவண்ணம் பின்புறமாகச் சென்று தன்னுடைய இருபது வலிய தோள்களாலும் அந்த வாலியைக் கட்டிப் பிடித்தான். வாலி அதை உணர்ந்ததும் தனது சந்தி நியமத்துக்குக் குறைவு ஏற்படாமல் அந்த இராவணனைத் தன் வாலால் இறுகப் பிணித்து வைத்து சந்தியாவந்தனம் முடிந்தபிறகு தன் வாலில் அவனைத் தொங்கவிட்டபடி, அந்த அரக்கன் தன் பத்து வாய்களிலும் இரத்தம் சிந்தி வருந்தும்படி, உலகின் பல பாகங்களிலும் சுற்றித் திரிந்தான். துன்பம் தாங்காமல் அந்த இராவணன் வாலியிடம் வருந்தி வேண்ட, இனித் தன்னிடம் வம்புக்கு வரக்கூடாது என்று விரட்டியடித்துவிட்ட கதையையும் அனுமன் சொன்னான்.
இருக்ஷரஜசு என்ற வானர வீரன் பார்வதி தேவியின் சாபத்தால், பெண் வானரமாக உருவெடுத்தான். அவளை இந்திரனும் சூரியனும் விரும்பி அடைய முறயே இந்திரனுக்கு வாலியும், சூரியனுக்கு சுக்ரீவனும் பிறந்ததாகக் கூறுவர். எனவே இவர் இருவருக்கும் தாய் ஒருத்தியே ஆயினும், தந்தை வெவ்வேறானவர்.
அத்தகைய வாலி எங்கள் வானர குலத்துக்கு அரசனாகவும், சுக்ரீவன் இளவரசாகவும் இருந்து வந்தனர். இப்படி இருந்த காலத்தில், வாலியின் பழைய பகைவன் மாயாவி எனும் அசுரன் ஒருவன் வந்து வாலியைத் தாக்கினான். வாலிக்கும் மாயாவிக்கும் கடும் யுத்தம் நடந்தது. நீண்ட நெடிய அந்த துவந்த யுத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இருவரும் போரிட்டுக் கொண்டே இருக்கையில் அந்த மாயாவி ஒரு குகைக்குள் சென்று விட்டான். கோபமடைந்த வாலி, சுக்ரீவனை அழைத்து 'நான் இந்தக் குகைக்குள் நுழைந்து அந்த மாயாவியைக் கொன்றுவிட்டு மீள்வேன், அதுவரை நீ இந்த பிலத்தின் வாயிலில் காவல் காத்துக் கொண்டிரு' என்று சொல்லிவிட்டு குகைக்குள் அவனும் நுழைந்தான்.
வாலி அப்படி குகைக்குள் நுழைந்து பதினான்கு பருவங்கள் (ஒரு பருவம் என்பது இரண்டு மாதம் - பருவங்கள் முறையே இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என ஆறு பருவங்கள்) ஆகியும் பிலத்துக்குள்ளிருந்து வாலி வெளியே வரவில்லை. சுக்ரீவன் காவல் காத்துக் கொண்டு நின்றான். அண்ணன் குகைக்குள்ளிருந்து வெளியே வராமையால் வருந்தி அழுதான் சுக்ரீவன். அங்கு அருகிலிருந்த வானரர்கள் அனைவரும் அவனைத் தேற்றி, தொழுது, வாலி இறந்திருக்கலாம். நாட்டுக்கு அரசன் தேவை. நீயே அரசனாக முடிசூட்டிக் கொள் என்றார்கள். சுக்ரீவன் அது தவறு, அவ்வாறு என்னால் செய்ய முடியாது என்று அண்ணன் மீதுள்ள அன்பின் காரணமாக மறுத்தான்.
நானே பிலத்துக்குள் நுழைந்து, என் அண்ணனுக்கு ஏற்பட்ட கதியைக் கண்டு அறிந்து வருவேன். அந்த மாயாவியைக் கொல்வேன், முடியாவிட்டால் அவனோடு போர் செய்து மாள்வேன் என்று அந்த குகைக்குள் நுழைய முயன்றான். ஆனால் வானர குல பெரியோர்கள், இதற்கு சம்மதிக்கவில்லை. சுக்ரீவனைக் கட்டாயப் படுத்தி அழைத்துச் சென்று முடிசூட்டிவிட்டனர். இப்படி அரசுரிமை, இவன் மீது திணிக்கப்பட்டதேயன்றி, இவன் விரும்பி அதனை ஏற்றுக் கொள்லவில்லை. சுக்ரீவன் மட்டும் வாலி இறக்கவில்லை என்றே நம்பி தனக்கு அரசுரிமை தேவையில்லை என்ற நிலையிலேயே இருந்த போது, அந்த குகையினின்றும் வாலி அந்த மாயாவியைக் கொன்றுவிட்டு வெளியே வந்தான். வானரங்கள் நாடு திரும்புகையில் குகை வாயிலை ஒரு பெரிய பாறையைக் கொண்டு அடைத்துவிட்டுத் திரும்பினர். அதை வாலி தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்தான்.
பிலத்தின் வாயை மூடிவிட்டு, நாட்டைத் தம்பி சுக்ரீவன் அபகரித்துக் கொண்டான் என்று வாலி கடும் கோபம் கொண்டான். வாலி வெளியே வந்துவிட்ட செய்தியறிந்து, சுக்ரீவன் ஓடிவந்து அவனது அடிபணிந்து வணங்கினான். சுக்ரீவன் மாறுபாடற்ற தூயமனம் உடையவன். தான் வேறு வாலி வேறு என்று நினைக்காத ஒருமித்த மனமுடையவன். நடந்த வரலாற்றையெல்லாம் வாலியிடம் சொல்லி, அவனையே நாட்டை ஆளும்படி கேட்டுக் கொண்டான். ஆனால் கடும் கோபமுற்றிருந்த வாலி, சுக்ரீவன் கூறிய சமாதானங்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளாமல், அவனை அடித்துப் புரட்டி எடுத்தான். உயிர் போய்விடும் என்கிற நிலையில் தப்பி ஓடிவிட்டான். வாலி வரமுடியாத இந்த ருசியமுக பர்வத்துக்கு வந்து இங்கேயே தங்கிவிட்டான்.
ஐயனே! இன்னொன்றும் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. சுக்ரீவனுக்கு உரிமையான ருமை எனும் பெயர் கொண்ட அவனது மனைவியையும், வாலி விரும்பி அபகரித்துக் கொண்டான். இவன் நாட்டையும் இழந்தான்; மனைவியையும் இழந்து உயிர் பிழைத்து இந்த மலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான், என்று இந்த வரலாற்றை அனுமன் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்த இராமனுக்கு உதடுகள் துடித்தன. கோபத்தில் அவன் தாமரை முகம்கூட செவ்வல்லி போல சிவந்து போனது.
தனது சிற்றன்னை கேட்ட வரத்துக்காக தம்பி பரதனுக்கு நாட்டைக் கொடுத்துவிட்டு, கானகம் வந்த இராமனுக்கு, தம்பியின் மனைவியை வாலி அபகரித்துக் கொண்டான் என்ற செய்தி கடும் கோபத்தை உண்டாக்கியது. இப்படிப்பட்ட கொடும் தொழில் புரிந்த வாலி உயிர் வாழக் கூடாது. எங்கே அவன்? இப்போதே அவன் உயிரை என் அம்பினால் குடித்து, உனது நாட்டையும், உன் மனைவியையும் மீட்டுத் தருகிறேன் என்று சூளுரைத்தான்.
லட்சுமி சுப்பிரமணியம்
அடுத்த வாரம் பாகம் ஐந்து தொடரும்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

