இராமாயண தொடர்ச்சி பகுதி 7 (ஆரண்ய காண்டம்)

top-news
FREE WEBSITE AD

சடாயு உயிர் நீத்தல்

மாரீசன் கூவல் சீதையின் செவியில் பட்டது; ‘இராமனுக்கு ஏதோ கேடு நிகழ்ந்து விட்டது, என்று தவறாய் நினைத்தாள்.

‘மானைப் பிடித்துக்கொடு, என்று சொன்னது எவ்வளவு அறிவீனமான செயல்’ என்பதை எண்ணி நொந்து கொண்டாள்; வெளியில் நின்று கொண்டிருந்த இளயவனை நோக்கி ‘அண்ணன் அலறல் கேட்டு நீ இங்கே நின்று கொண்டிருக்கிறாயே! தகுமா?” என்று கண்டித்தாள்.

‘இராமனை எதிர்த்து வெல்வார் எவரும் இல்லை என்பது எனக்குத் தெரியும்; அவனுக்கு ஒன்றும் ஆகாது’ என்று உறுதியாகச் சொன்னான்.

“ஒருநாள் பழகினும் உயிர்விடும் பெரியோர் உளர்; பலநாள் பழகிய நீ, உடன் பிறப்பு என்ற உரிமையுடைய நீ சிறிதும் பதறாமல் அஞ்சாமல் நிற்கிறாயே! இங்கே நீ செயலற்று இருந்தால் நெருப்பில் விழுந்து, என் உயிரை யான் விடுவது உறுதி” என்றாள்.

அதற்குமேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை; இருந்தாலும் இழிவு; நீங்கினாலும் இழவு என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்தான்; “கழுகின் வேந்தன் காவல் இருக்கிறது” என்ற நம்பிக்கையில் குரல்வந்த திசை
 நோக்கி ஓடினான்.

இராவணன் வருகை

இலக்குவன் இடம் பெயர்தலை எதிர்நோக்கி இருந்த இராவணன், தவ வேடம் தாங்கிச் சாம வேதத்தை ​வீணையில் இசைத்துப் பாடினான்; முதிய வேடம் அவனுக்கு முகமூடியைத் தந்தது; அருந்ததி போன்ற கற்புடைய சீதை இருந்த பர்ணசாலையை அடைந்தான்.

“இந்தப் பர்ணசாலை உள் இருப்பது யார்?” என்று கேட்டான், பவளக்கொம்பு போன்ற சீதை, “உள்ளே வாருங்கள்” என்று வரவேற்றாள்; அவனும் அவள் தந்த இருக்கையில் அமர்ந்தான்.

“இந்த சாலை யாருடையது? இங்கு உறையும் அருந்தவன் யாவன்? நீவிர் யாவிர்?” என்று கேட்டான்.

“புதியவர்போல இருக்கிறது”” என்று அவனிடம் பரிவு காட்டிப் பேசினாள்.

“இராமனும் யானும் அவன் தம்பியோடு இங்குத் தங்கி இருக்கிறோம்; அன்னை சொற்கேட்டு இங்கு வந்திருக்கிறோம். அவர் பெயரினை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர் என்று நினைகிறேன்” என்றாள்.

“உம்முடைய பெற்றோர் யார்?” என்று கேட்டான்.

“சனகன் மகள்; என் பெயர் சானகி என்றாள்.

“முதியவரே நீர் எங்கிருந்து வருகிறீர்?”

“இராவணன் திருநகரில் இருந்து வந்திருக்கிறேன்; அவனுக்கு எந்தக் குறையும் இல்லை; எனினும், அவன் ஒரு மங்கையைத் தேடிக் கொண்டிருக்கிறான்” என்றான்.

“அரக்கர் நகரில் அருந்தவ முனிவராகிய நீர் எப்படித் தங்கி இருந்தீர்” என்று கேட்டாள். ​

“நீ கருதுவதுபோல அரக்கர் தீயவர் அல்லர்” என்றான்.

“தீயவர்களோடு சேர்கிறவர்கள் நல்லவர்களாய் இருக்க முடியாதே”

“வல்லமை உடையவர் அரக்கர்; அவர்களை அனுசரித்து வாழ்வதுதான் அறிவுடைமை” என்றான்.

“அரக்கரை அடியோடு ஒழிக்க இராமன் காத்திருக்கிறான்; அவர்கள் அழிந்தபின்னரே உலகம் சீர்படும்” என்றாள்.

“மனிதர் வலியவரான அரக்கரை அழிப்பார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது; யானைக் கூட்டத்தை ஒருசிறு முயல் வெல்லாது; ஆண் சிங்கத்தை ஒரு மான் குட்டி எப்படி வெல்லும்?” என்று கேட்டான்.

“இராமன் விராதனையும் சூர்ப்பனகையையும், கரன் முதலானவரையும் கொன்றது உமக்குத் தெரியாது போலும்! ஆண் சிங்கம் என்பது இராமன்தான்; அரக்கர்தாம் மான் கூட்டம்” என்றாள்.

“இராவணன் ஆற்றல் மிக்கவன்; அது தெரியாமல் நீ பேசுகிறாய்” என்றான்.

“பரசுராமனை வென்றவன் இராமன்; அவன் ஆற்றலை நீ அறியாமல் பேசுவது வியப்பாக இருக்கிறது” என்றாள்.

அவன் பெருஞ்சினம் கொண்டான்; அதனால், அவன் மாயவேடமும் மறைந்தது; தன் முன்னால் ​இருப்பவன் இராவணன் என்பதைச் சீதை அறிந்தாள்; அவனிடமிருந்து தப்பிச் செல்ல வழியறியாமல் தவித்தாள்.தேவர் எனக்கு ஏவல் செய்கிறார்கள்; புழுக்களைப் போல வாழும் மானிடர் அரக்கனாகிய என்னிலும் வலியவர்” என்று பேசுகிறாய்; உன்னைப் பிசைந்து தின்று விடுவேன்; அதன்பின் நீ இல்லாமல் நான் வாழ முடியாது என்பதால்தான் தயங்குகிறேன்” என்றான்.

“நீ கவலைப்படாதே; என் செல்வச் சிறப்பில் நீ மகிழ்ச்சியோடு இருக்கலாம்” என்று தொடர்ந்தான்.

“நான் இராமன் மனைவி; நீ நாயினும் கேடானவன்; இராமனது கொடிய அம்பு பாய்வதன்முன் தப்பி ஒடிவிடு!” என்று கூறினாள்.

“அந்த அம்பு என்னை ஒன்றும் செய்யாது. அது மலராக எனக்குப்படும், நீ என் விருப்பத்தை நிறைவேற்றி எனக்கு உயிர்ப் பிச்சை கொடு” என்று இரந்து அவள் கால்களில் விழுந்து வனங்கினான். அவள் இராமனையும் இலக்குவனையும் ‘இறைவா இளையாங்னே’ என்று கூவிஅழைத்தாள். அவனுக்கு பிரம்மனால் ஏற்பட்டிருந்த சாபத்தால் அவளைத் தொட அஞ்சினான். அவளைத் தொடாமல் தரையோடு பர்ண சாலையைப்பெயர்த்து எடுத்து விமானத்தில் வைத்து விண்ணில் பறந்தான். மேகத்திலிருந்து நிலத்தில் விழும் மின்னலைப்போல அவள் மயங்கி விழுந்தாள். மயக்கம் நீங்கி ‘ஒ’ என்று கதறினாள்.

“நீ ஒரு கோழை; அதனால்தான் இந்த வஞ்சகச் செயலை மேற்கொண்டாய்” என்று விளம்பினாள்.

“மனிதரிடம் போர் செய்தால் அது என் வீரத்துக்கு இழுக்கு; வஞ்சனைதான் வெற்றி தரும்” என்றான். ​

“சித்திரப்பாவை நிகர்த்த சீதை அவன் கூறுவதை எள்ளி நகையாடினாள். கற்புடைய பெண்களை வஞ்சிப்பது குற்றமில்லையா?” என்று கேட்டாள்.

சீதையின் குரல் கேட்டுக் கழுகின் வேந்தன் சடாயு என்பான் வந்து இடை மறித்தான்.

“அடே! எங்கே போகிறாய்? நில், நில்”” என்று கூவிக்கொண்டு சடாயு வழி மறித்தான்.

“நீ அழிவைப் பெறப்போகிறாய். உன் சுற்றத்தாரையும் அழிக்கிறாய். இராமன் முன் உன் ஆற்றல் நிற்காது. ஏன் வீணே அழிவைத் தேடிக் கொள்கிறாய்; சீதையை விட்டுவிடு” என்றான்.

“பழுக்கக் காய்ச்சிய இரும்பில் தூவிய நீர் மீண்டும் வராது. அதே போலத்தான் சீதையின் நிலையும். அவளை உன்னால் மீட்க முடியாது” என்றான்.

சடாயுவும் இராவணனும் மோதிக் கொண்டனர். இராவணனைச் சடாயு தேரோடு கீழே சாய்த்தான். இனி இராவணன் பிழைக்க மாட்டான் என்ற நிலைமை உருவாகியது. அவனிடம் வேறு ஆயுதங்கள் இல்லை. தன் உறையில் “சந்திரகாசம்” என்னும் வாள் இருந்தது. அது அவனுக்குச் சிவபெருமான் அளித்தது. அதைக் கொண்டு சடாயுவின் சிறகுகளைக் கொய்தான். அவனும் சிறகு அறுபட்டுக் கீழே சாய்ந்தான்.

சீதை சடாயுவை நினைத்துப் புலம்பினாள். அவளை அந்தப் பர்னசாலையோடு தன் தோளில் வைத்துக் கொண்டு இராவணன் ஆகாய வழியாக இலங்கையை ​அடைந்தான். அங்கே சீதையை அசோக வனத்தில் அசோக மரத்தின் நிழிலில் சிறை வைத்தான். அரக்கியர் அவளைக் காவல் செய்தனர்.

இலக்குவன் சீதையைத் தனியே விட்டு வந்தோமே என்ற வருத்தம், இராமனைக் காண வில்லையே என்ற கவலை இரண்டிலும் அகப்பட்டுத் துடித்தான்.

இராமனைக் கண்டான்; அளவிலா மகிழ்ச்சி கொண்டான். இராமன் தன் தம்பியை அன்பால் தழுவிக் கொண்டான்.

“நீ ஏன் இங்கு வந்தாய்?” என்று கேட்டான்.

இலக்குவன் நடந்ததைச் சொன்னான்; தான் அங்கு வரவில்லை என்றால் சீதை நெருப்பில் விழுந்து இறந்திருப்பாள் என்பதை விளக்கினான்.

இலக்குவன் தடுத்தும் தான் மான்பின் சென்றது தவறு என்பதை இராமன் ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தினான். விரைவில் பர்ணசாலை திரும்புதல் வேண்டும் என்று கூறி இருவரும் வேகமாக நடந்தனர். பர்ணசாலையை அடைந்தனர்.

பஞ்சவடியில் சீதையைக் காணவில்லை. தேடி வைத்த செல்வம் வைத்த இடத்தில் இல்லாவிட்டால் எத்தகைய துன்பம் அடைவார்களோ அத்தகைய துன்பத்தை இராமன் அடைந்தான். அவன் மனம் சுழன்றது. உலகமே சுழன்று திரிவதைப்போல அவனுக்குக் காணப்பட்டது. ​அவன் கோபத்தால் கண்கள் சிவந்தன. தருமத்தின் மீதும், சீதையைக் காக்காத தேவர்களின் மீதும் அவன் கோபம் பாய்ந்தது. தேரினுடைய சக்கரங்கள் பூமியில் பதிந்து இருப்பதைப் பார்த்தார்கள். சீதையைத் தொடுவதற்கு அஞ்சி அவள் இருந்த நிலத்தை அடியோடு பெயர்த்துக் கொண்டு போனதையும் அறிந்தார்கள். “சீதையைக் கவர்ந்தவன். வெகுதூரம் செல்வதற்கு முன்பு அவனைத் தொடர்ந்து செல்வோம்” என்று இராமன் கூறினான். தேர்ச்சுவடுகள் வழிச் சென்றனர். ஓர் இடத்தில் அச்சுவடுகள் நின்றுவிட்டன. அவன் ஆகாய வழியே சென்னறிருக்க வேண்டும் என்பதை அறிநகூறினான்.அம்பு தாக்க முடியாத தூரத்திற்குச் செ ைறிருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இரண்டு யோசனை தூரம் நடந்து சென்றனர். வீணையின் சித்திரம் வரையப் பெற்ற துகில் கொடி ஒன்று நிலத்தின் மீது கிடப்பதைக் கண்டனர். அந்தக் கொடி சடாயுவின் மூக்கால்தான் அறுபட்டு இருக்க வேண்டும் என்று உணர்ந்தனர். மேலும் தொடர்ந்து சென்றனர். வலிமையான ஒரு வில்லைக் கண்டனர். இதுவும் சடாயுவால் கடிக்கப்பட்டிருக்கிறது என்று முடிவு செய்தனர். பெரிய சூலம் ஒன்றையும் அம்பறாத் துணிகள் இரண்டையும் கண்டனர். இராவணன் மார்பிலிருந்து சடாயு பறித்த கவசம் சிதைந்து கிடந்ததைக் கண்டனர். குதிரைகள் விழுந்து கிடந்ததையும் தேர்ப் பாகன் மடிந்து கிடந்ததையும் கண்டனர். தோளில் அணியும் ஆபரணங்களையும் கவச குண்டலங்களையும் மணிகள் பதித்த மகுடங்களையும் கண்டனர். சடாயுவுடன் ​போரிட்டவன் சிங்கம் போன்ற ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும் என்று கணித்தனர்.

கடலில் மத்தாக வைக்கப்பட்ட மந்தர மலையைப் போல இரத்த வெள்ளத்தில் இராமன் சடாயுவைப் பார்த்தான்; அவன் மீது இராமன் விழுந்து கதறி அழுதான்.

“தந்தையை நாட்டில் இழந்தேன்; மற்றொரு தந்தையைக் காட்டில் இழந்தேன். என்னைப் போல அபாக்கியவான் வேறு யாரும் இருக்க முடியாது”.

“'சீதைக்கும் உனக்கும் நேர்ந்த தீமைகளைத் தடுக்க முடியாத நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? தவசிகளின் வேண்டுகோளை ஏற்று அரக்கரை அழிப்பதாக வாக்குறுதி அளித்தேன், அதனால்தான் வாழ்கிறேன். உன்னைக் கொன்ற பகைவன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்தும் போர் மேற்கொள்ளா மல் இங்கே மரம்போல் நிற்கிறேன்” என்று கூறிக் கதறினான்.

சடாயு இறக்கவில்லை; ஒரளவு உணர்ச்சி இருந்ததை அறிந்தான். சீதையை இராவணன் வலிதிற் கடத்திச் சென்றான் என்று சடாயு கூறினான்.

மலரணிந்த வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் எடுத்தான். ஏகுவானை எதிர்த்து நின்று ஆற்றல் கொண்டு தடுத்தனன்; என்ன செய்வது? சங்கரன் தந்த வாளால் என் சிறகுகளை வெட்டினான். இங்கு விழுந்து கிடக்கிறேன்; இது இங்கு நடந்தது” என்றான்.

இராமன் சினமும் சீற்றமும் கொண்டான். “சீதையைக் கடத்திய கொடுமையன் எங்கே சென்றான்?” என்று கேட்டான். ​அதற்கு அவனால் விடை கூற முடியவில்லை; அவன் மூச்சு அடங்கியது.

“தம்பி! நம் தந்தைக்கு நாம் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களைச் செய்வோம்” என்றான்.

விறகுகள் கொண்டு வந்து தீ மூட்டி சடாயுவைக் கிடத்தி இராமன் எரியூட்டினான். மற்றும் ஈமச் சடங்குகள் அனைத்தும் செய்து முடித்தனர்.

அந்திப்பொழுது வந்து அணுகியது; இராமனும் இலக்குவனும் சடாயு உயிர் நீத்த இடத்தைவிட்டு நீங்கிச் செக்கர் வானம் நிறைந்த மேகம் தவழும் ஒரு மலையில் தங்கினர். இருள் மிகுந்தது; பிரிவு என்னும் துயர் இராமனை வாட்டியது. மனைவியை மாற்றான் கொண்டு சென்றதால் ஏற்பட்ட மானமும், இராவணன் மீது கொண்ட சினமும், தந்தை போன்றவனாகிய சடாயுவின் மரணத்தால் ஏற்பட்ட துயரமும் இவர்களை வாட்டின; இவற்றை மெல்ல மறந்து வாழ வேண்டும் என்ற ஞானமும், தாங்க முடியாத துயரும் மனப் போராட்டமாக உருக்கொண்டன; இரவுப் பொழுதெல்லாம் தூங்காது பலவாறாக எண்ணித் துயருற்றனர்.இளைய வீரனான இலக்குவன் இராமனிடம் அடக்கமாக “பொன் போன்ற சீதையைத் தேடாமல் ஈண்டு இருத்தல் தகுதியோ” என்று கேட்டான். புகழ்மிக்க இராமனும், அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிவோம் என்று கூறி மலைத் தொடரில் வெய்யில் மிகுந்த காட்டுக்குள் தேடிச் சென்றான். குன்றுகளையும் ஆறு ​களையும் கடந்து பதினெட்டு யோசனை தூரம் நடந்து சென்றனர். பறவைகள் தங்குகின்ற குளர்ச்சிமிக்க சோலை ஒன்றில் புகுந்தனர். மாலைப்பொழுது மறைந்து இருட்பொழுது வந்து சேர்ந்தது. அங்கு ஒரு பளிக்கறை மண்டபத்தில் இருவரும் தங்கினர். “வீரனே! குடிப்பதற்கு நீர் வேண்டும் கொண்டு வருக” என்றான். இராமனை விட்டு இலக்குவன் தனியே சென்றான்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *