காஸா மீதான தாக்குதலுக்கு பிரான்ஸ் ஆயுத விற்பனை முன்னெடுக்கவில்லை- இமானுவல் மேக்ரான்!
- Muthu Kumar
- 06 Oct, 2024
காஸாவில் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் விற்பனையை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
காஸா மீதான தாக்குதலுக்கு பிரான்ஸ் ஆயுத விற்பனை முன்னெடுக்கவில்லை என்றும் மேக்ரான் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். காஸா போரில் பயன்படுத்தப்படும் ஆயுத விநியோகத்தை பிரான்ஸ் நிறுத்துவதாகவும், பிரான்ஸ் இனி ஆயுதங்களை இஸ்ரேலுக்கு விநியோகம் செய்வதில்லை என்றும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
காஸாவில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில் அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை ரத்து செய்யாததை அடுத்து மனித உரிமை அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதுவரை இஸ்ரேலுக்கு வெறும் உதிரி பாகங்கள் மட்டுமே பிரான்ஸ் ஏற்றுமதி செய்து வந்துள்ளதாகவும், 2022ல் 15 மில்லியன் யூரோ தொகைக்கு மட்டும் உதிரி பாகங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளதாகவும் பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் எதுவும் பிரான்ஸ் வழங்கவில்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். ஆனால் உதிரி பாகங்கள் விற்பனையும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரான்ஸில் வலுப்பெற்றுள்ளது.
கடந்த மாதம் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை உரிமங்களில் சிலவற்றை பிரிட்டானிய புதிய அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இந்த முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.கடந்த வாரம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இஸ்ரேலுக்கான புதிய ஆயுத ஏற்றுமதி உரிமங்களுக்கு ஜேர்மனி இடைநிறுத்தம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
காஸா மீதான தாக்குதல் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் தற்போது ஹிஸ்புல்லா படைகள் மீது போர் தொடுக்கத் தொடங்கியுள்ள நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் ஆயுத ஏற்றுமதி தடை குறித்து உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே, போர் நிறுத்தம் தொடர்பில் கோரிக்கை முன்வைத்து வந்துள்ள தலைவர்களை இஸ்ரேல் நிர்வாகம் திட்டமிட்டு கொலை செய்து வருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *