பயமா? எங்களுக்கா?! அது வெற்றுக் கண்ணோட்டம்! - சம்சுரி

top-news

மூவார், ஜூலை 2: ஜொகூர் மாநிலத் தேர்தலில் டிஏபி-யை எதிர்கொள்ள தங்கள் கட்சிக்கு அச்சமில்லை என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

ஜூலை 11 தேர்தலில் டிஏபி-க்கு எதிரான நேரடிப் போட்டிகளை பாஸ் கட்சி தவிர்த்து வருவதாக டிஏபி பொதுச்செயலாளர் அந்தோணி லோக் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சம்சுரி, மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு டிஏபி-யின் என்ங் கோர் சிம் வசம் இருந்த ஜெமெந்தா மாநிலத் தொகுதியில் தங்கள் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

பாஸ் கட்சி அச்சப்படுகிறது என்ற கேள்விக்கே இடமில்லை. அது அந்தோணி லோக்கின் வெற்றுக் கண்ணோட்டம் என்று பெரிகாத்தான் நேஷனல் தலைவருமான அவர் கூறினார்.

சில தொகுதிகளில் ஏன் போட்டியிட வேண்டும், மற்றவற்றில் ஏன் போட்டியிடக் கூடாது என்பது குறித்து தாங்கள் ஆய்வு செய்தோம். மேலும், தங்களால் ஒரு நம்பகமான போட்டியை அளிக்க முடியும் என்று நம்பும் இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மலாய் அல்லாதவர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் போட்டியிடுவது தங்களுக்கு ஒரு பெரிய சவால் என்பதை அறிவோம். எனவே, இயல்பாகவே,  வெற்றி வாய்ப்புகள் மற்றும் வேட்பாளரின் பொருத்தத்தின் அடிப்படையிலேயே தங்களின் கணிப்புகள் அமைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

மகாராணி தொகுதியில் பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர் அனுவார் ஹயானுக்காகப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது, ​​சம்சுரி செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.

நேற்று ஒரு நிகழ்வில் , மாநிலத் தேர்தலில் டிஏபி-யை எதிர்கொள்ள பாஸ் கட்சி தயக்கம் காட்டுவதாகவும், அதற்குப் பதிலாக தனது "பினாமி"யான பாரிசான் நேஷனலை நம்பியிருக்கத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் லோக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *