திரிசூலம் அவமதிப்பு வழக்கு – தமிம் தாரியைப் பிடிக்க இன்டர்போல் ரெட் நோட்டீஸ்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 15: மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள சர்ச்சைக்குரிய செயற்பாட்டாளர் தமிம் தாரி அப்துல் ரசாக்கை கைது செய்ய, மலேசிய போலீஸ் இன்டர்போலிடம் ரெட் நோட்டீஸ் கோரி விண்ணப்பித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அஹமட் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தமிம் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

குடிநுழைவுத் துறையின் சோதனைகளின்படி, அவர் இன்னும் வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுவதாக அமைச்சர் கூறினார்.

மேலும், லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த மே 17ஆம் தேதி தமிமுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்ததாகவும், அவரது பெயர் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அவரது கடவுச்சீட்டை ரத்து செய்ய போலீஸ் கோரிக்கை விடுத்ததுடன், ஜூன் 8ஆம் தேதி இன்டர்போல் ரெட் நோட்டீஸ் விண்ணப்பமும் செய்துள்ளதாக கூறினார்.

தமிமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பக்காத்தான் ஹராப்பான் – ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இந்தப் பதிலை வழங்கினார்.

முன்னதாக, புனிதமான இந்து சின்னமான திரிசூலத்தை அவமதித்ததாகக் கூறப்படும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து தமிமுக்கு எதிராக மொத்தம் 192 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்து கோவில்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிம், திரிசூலத்தை அவமதித்தது குறித்து தனக்குத் தெரியாது என்றும், அதைப் பழைய இரும்புத் துண்டு என தவறாக நினைத்ததாகவும் கூறியிருந்தார்.

கடந்த மார்ச் 17ஆம் தேதி, மதத்தை அவமதிக்கும் நோக்கில் புனிதப் பொருளைச் சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டும் குற்றவியல் சட்டம் பிரிவு 295 கீழ் லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவிருந்தது.

ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராக குறைந்தது இரண்டு மாத கால அவகாசம் தேவை என அரசுத் தரப்பு கோரியது. தமிம், பாங்காக்கில் இருந்து ரியாத்துக்கு பயணம் செய்து பின்னர் சவுதி அரேபியாவில் இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *