ஆர்டிக் பொதுப் பூப்பந்து இறுதிப் போட்டி-பெர்லி-தினா அபார வெற்றி!
- Muthu Kumar
- 13 Oct, 2025
வந்தா, (பின்லாந்து) அக். 13
பின்லாந்தின் வந்தா எனுமிடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்டிக் பொதுப் பூப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று மலேசிய மகளிர் இரட்டையர் பூப்பந்து வீராங்கனைகளான பெர்லி-தீனா ஜோடியினர் சரித்திரம் படைத்துள்ளனர்.
இரண்டு மாதங்களில் படைக்கப்பட்டிருக்கும் மலேசியாவின் இரண்டாவது பூப்பந்துப் போட்டி சரித்திரம் இதுவாகும்.நேற்றைய இறுதி ஆட்டத்தில் மலேசிய ஜோடியினர், உலகில் ஆறாவது நிலையில் உள்ள ஜப்பானின் ரின் இவானகா-கி நகானிஷி ஜோடியினரை 21-7, 21-9 என்ற நிலையில் வீழ்த்தினர். இந்த ஆட்டம் வெறும் 31 நிமிடங்களில் முடிவுற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, இப்போட்டியில் மகளிர் இரட்டையர் கிண்ணத்தை வெற்றி பெற்றுள்ள முதல் மலேசியப் பெண்களாக பெர்லி-தீனா ஜோடியினர் விளங்குகின்றனர்.
இதுவரை நடந்துள்ள எட்டு போட்டிகளில் பெர்லி-தீனா ஜோடியினர் ஜப்பானிய ஜோடியினரை ஆறு முறை தோற்கடித்திருக்கின்றனர்.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உலக மகளிர் இரட்டையர் பிரிவில் இரண்டாம் நிலையில் இருக்கும் இவர்கள் இருவரும் பிடபிள்யூஎஃப் உலகப் பூப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றதோடு, அதில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற முதலாவது தேசிய மகளிர் இரட்டையர் ஜோடியினராகவும் விளங்குகின்றனர்.
நேற்றைய வெற்றியின் மூலம் பெர்லி-தீனா ஜோடியினர், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 468 வெள்ளியை (37,525 அமெரிக்க டாலர்) பரிசாகப் பெற்றனர். இவ்வாண்டில் இவர்கள் இருவருக்கும் கிடைத்திருக்கும் இரண்டாவது வெற்றி இதுவாகும். இதுவரையில் ஆறு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கும் இவர்கள், கடந்த மே மாதம் நடைபெற்ற தாய்லாந்து பொதுப் பூப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்று அதில் வெற்றியும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவில் தொடங்கிய ஆர்டிக் பொதுப் பூப்பந்துப் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றிருக்கும் மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் இக் ஜோடியினர், அதில் இங்கிலாந்தின் பென் லேன்-ஷோன் வெண்டி ஜொடியினரை சந்திக்க இருக்கின்றனர்.
இதில் ஆரோன்-சோ ஜோடியினர் வெற்றி பெற்றால், கடந்த 1995ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆர்டிக் பொதுப் பூப்பந்துப் போட்டியில் இரண்டு பிரிவுகளில் வெற்றி பெற்ற முதலாவது நாடாக மலேசியா விளங்கும்.
-
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



