மலாக்கா சட்டமன்றத் தேர்தல் இரு மாதங்களுக்குள் நடைபெறலாம்: சம்சுரி சூசகம்
- Surendran Sumdraraj
- 24 Aug, 2026
பெட்டாலிங் ஜெயா, ஆக. 24-
மலாக்கா மாநிலத் தேர்தல் இரண்டு மாதங்களுக்குள் நடத்தப்படலாம் என பெரிகாத்தான் நேஷனல் தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார் சூசகமாகத் தெரிவித்துள்ளார். அந்தக் காலக்கெடுவுக்கு ஒரு காரணம் இருப்பதாகக் கூறிய அவர், அதுகுறித்து விரிவாகக் கூற மறுத்துவிட்டார்.
மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பும், வாக்குப்பதிவு நாள் வரையிலும் உள்ள காலம் இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்காது என்று தாம் நம்புவதாக நேற்று இரவு மலாக்காவில் நடைபெற்ற பாஸ் கட்சியின் நிதி திரட்டும் இரவு விருந்தில் அவர் கூறினார்.
பாஸ் கட்சியின் உதவித் தலைவரான சம்சுரி, தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு அதிகபட்சம் 60 நாட்கள் மட்டுமே உள்ளன என்ற அடிப்படையில் தேர்தல் இயந்திரங்கள் செயல்பட வேண்டும் என்று கூறினார். மலாக்காவின் அரசியல் சூழல் நிலையற்றதாக இருப்பதால், அந்த 60 நாட்களை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.
பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் உறுப்பினர்கள், தங்களை ஒரு காத்திருக்கும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு முன்வைத்து, மாநில அரசாங்கத்தை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பாரிசான் நேஷனல் தற்போது பெரிக்காத்தான் நேஷனல் அல்லது பக்கத்தான் ஹரப்பான் ஆகியவற்றுடன் ஒரு தேர்தல் உடன்படிக்கையை பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



