கெடாவில் சூதாட்டம் வேண்டாம் என முஸ்லிம்களுக்கு உரையாற்ற ராம்கர்பாலை அழைத்த சனுசி
- Surendran Sumdraraj
- 26 Aug, 2026
அலோர் ஸ்டார், ஆக. 26-
கெடா மாநிலத்தில் முஸ்லிம்கள் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தி உரையாற்ற புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங்கிற்கு கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி அழைப்பு விடுத்துள்ளார்.
கெடாவில் சூதாட்ட வணிக உரிமங்களை புதுப்பிக்காத மாநில அரசின் கொள்கை தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அனுமதி கோரிய விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து, கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை கெடா மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என ராம்கர்பால் வலியுறுத்தியிருந்தார். இதற்குப் பதிலளித்த சனுசி, மாநிலத்தில் சூதாட்ட நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சி இதோடு முடிவடையாது என்று தெரிவித்தார்.
சட்டத்தின் பிற வழிமுறைகளைப் பயன்படுத்தி சூதாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
“கூட்டரசு நீதிமன்றம் எங்கள் மேல்முறையீட்டு அனுமதி விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதால், கெடாவில் சூதாட்ட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூற முடியாது. இந்த விவகாரத்தில் இன்னும் சட்டபூர்வமான வழிகள் உள்ளன,” என சனுசி தெரிவித்தார்.
மேலும், சூதாட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அனைவரும் பங்காற்ற வேண்டும் என்றும், குறிப்பாக முஸ்லிம்கள் சூதாட்டத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை விளக்க ராம்கர்பால் நேரடியாக வந்து உரையாற்றலாம் என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



