சிலாங்கூரின் மாதாந்திர RM30 பொதுப் போக்குவரத்து மானியம் KTM சேவைகளுக்கும் விரிவாக்கம்

top-news

ஷா ஆலாம், அக் 2:
சிலாங்கூர் மாநில அரசு, தனது மாதந்திர RM30 பொதுப் போக்குவரத்து மானியத் திட்டத்தை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் KTM கொம்யூட்டர் (KTM Komuter) சேவைகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

தொடக்கத்தில் 'Rapid KL On-Demand' மற்றும் 'Kumpool' சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த மானியத்தால், இப்போது இன்னும் அதிகமான பயணிகள் பயனடைய முடியும் என்று மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான குழுத் தலைவர் ங் ஸே ஹான் (Ng Sze Han) தெரிவித்தார்.

முன்பு மானியம் பெற்றவர்களில் 90%-க்கும் அதிகமானோர் 'Rapid KL On-Demand' சேவையையே தேர்ந்தெடுத்ததாகவும், அவர்களில் 26 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் 35% என்ற அளவில் மிகப்பெரிய பயனர் குழுவாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

KTM கொம்யூட்டர் சேவையையும் இத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், சிலாங்கூர் மாநிலப் பயணிகள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவும், பொதுப் போக்குவரத்து வலையமைப்பின் பயன்பாட்டை அதிகரிக்கவும்  இலக்கு கொண்டுள்ளதாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

விண்ணப்பதாரர்கள் சிலாங்கூர் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இருக்க வேண்டும். வசிப்பிட முகவரி அல்லது பணிபுரியும் இடத்தைக் காட்டிலும், வாக்காளர் பதிவு நிலையைக் கொண்டே தகுதி தீர்மானிக்கப்படுகிறது.

கிள்ளன் பள்ளத்தாக்கு (Klang Valley) மற்றும் வடக்கு மண்டலங்களில் உள்ள KTM கொம்யூட்டர் சேவைகள், அத்துடன் தெற்குப் பகுதி ஷட்டில் (shuttle) சேவை ஆகியவற்றுக்கும் இந்த மானியம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *