FAM நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டாக பதவி விலகல்
- Tamil Malar (Reporter)
- 28 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 28-
மலேசிய கால்பந்து சங்கத்தின் (FAM) 2025–2029 காலகட்டத்திற்கான அனைத்து நிர்வாகக் குழு (Executive Committee) உறுப்பினர்களும் உடனடியாக, கூட்டாகவும் தன்னார்வமாகவும் பதவி விலகியுள்ளதாக FAM இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
FAM இடைக்கால தலைவர் டத்தோ முகமட் யூசோப் மஹாடி , இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாகவும், தனிப்பட்ட பதவியோ அல்லது சொந்த நலனோ இன்றி, முழுமையாக அமைப்பின் பொறுப்புணர்வைக் கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சமீப காலமாக உருவாகியுள்ள நிலைமைகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், FAM இன் நம்பகத்தன்மையும் நேர்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்த முடிவின் அடிப்படை நோக்கம் என்றார்.
“இது அவசரமான அல்லது அழுத்தத்தால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. மாறாக, விவேகமும் கொள்கையும் சார்ந்த ஒரு தீர்மானமாகும்,” என அவர் வலியுறுத்தினார். தற்போதைய சூழ்நிலையில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டு பொறுப்பை ஏற்று, அமைப்பின் ஒருங்கிணைந்த நலனை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், FAM இன் மரியாதை, வெளிப்படைத்தன்மை, நேர்மை பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதே இந்த பதவி விலகலின் முக்கிய நோக்கம் என இடைக்கால தலைவர் விளக்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



