சிங்கப்பூர் ஹாங்காங்கை வீழ்த்தி 2027 ஆசியக் கோப்பைக்குத் தகுதி

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், நவ. 19-

சிங்கப்பூர் அணி ஹாங்காங்கின் கை தாக் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கை வென்று, 2027-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முதல் தடவையாகத் தகுதி பெற்றது.

போட்டியின் தொடக்கத்தில் ஹாங்காங் முன்னிலை பெற்றது. 14-ஆவது நிமிடத்தில் எவர்டன் காமர்கோவின் அபாரமான உதவியால் ஒரு கோலை அடித்து ஹாங்காங் முன்னிலை வகித்தது.

ஆனால் பயிற்சியாளர் கேவின் லீ தலைமையிலான ‘சிங்கா’ அணி துவண்டு போகவில்லை. 63-ஆவது நிமிடத்தில் மாற்றாட்டக்காரராக களமிறங்கிய இல்ஹான் பாண்டி அளித்த அற்புதமான பாஸை ஷவால் அனுவார் கோலாக மாற்றி சமநிலை ஏற்படுத்தினார். அரங்கில் இருந்த சிங்கப்பூர் ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர்.

பின்னர் 78-ஆவது நிமிடத்தில் இல்ஹான் பாண்டி மீண்டும் ஜொலித்தார். அவர் அடித்த பந்தை ஹாங்காங் டிபெண்டர் தவறுதலாக தன் சொந்த வலையிலேயே செலுத்த, சிங்கப்பூர் 2-1 என முன்னிலை பெற்றது. கடைசி வரை தாக்குப்பிடித்த சிங்கப்பூர், வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியால் சிங்கப்பூர் அடுத்த ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் விளையாடும் முதல் தென்கிழக்காசிய அணி என்ற பெருமையைப் பெற்றது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *