எதிர்காலத்தில் இணையவழி வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த வாய்ப்பு: தேர்தல் ஆணையம்
- Surendran Sumdraraj
- 14 Aug, 2026
கோலாலம்பூர், ஆக.14 —
எதிர்காலத்தில் நாட்டில் தேர்தல்களை இணையவழியாக நடத்துவதற்கான வாய்ப்பை மலேசிய தேர்தல் ஆணையம் (SPR) நிராகரிக்கவில்லை என அதன் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்துள்ளார்.
எனினும், மின்னணு வாக்களிப்பு அல்லது ‘இ-வோட்டிங்’ முறையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறினார்.
குறிப்பாக, இத்தகைய முறையின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை குறித்த அவர்களின் கருத்துகள் கவனமாக மதிப்பிடப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இ-வோட்டிங் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக பல முக்கிய அம்சங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளதாக ரம்லான் கூறினார். அவற்றில் இணையப் பாதுகாப்பு, தேர்தல் நடைமுறையின் நேர்மை, வாக்குகளின் ரகசியத்தன்மை மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்பின் தயார் நிலை ஆகியவை அடங்கும்.
மேலும், இம்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதுள்ள சட்டங்களில் மாற்றங்கள் தேவைப்பட்டால், அதற்கான சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



