மீண்டு இஸ்ரேல் அட்டுழியம்! நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி! ஈரான் எச்சரிக்கை
- Shan Siva
- 09 Apr, 2026
பெய்ரூட்,ஏப் 9: அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலில் 112பேர் கொல்லப்பட்டனர். 817-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையே இரண்டு வார காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராகத் தங்கள் போர் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். இதன் வெளிப்பாடாகவே, பெய்ரூட்டின் மத்தியப் பகுதிகள் மற்றும் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தனது மிகப்பெரிய ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் போர் விமானங்கள் வெறும் 10 நிமிட இடைவெளியில் லெபனான் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெய்ரூட்டின் வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகள் முன்னறிவிப்பின்றித் தாக்கப்பட்டதால், தெருக்களில் சென்ற வாகனங்கள் தீக்கிரையாயின. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உயிரிழந்தவர்களில் 12 பேர் மருத்துவப் பணியாளர்கள் ஆவர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் இடமில்லாத சூழல் நிலவுகிறது. அவசரமாக ரத்த தானம் செய்யுமாறு அரசு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த மறைமுகத் தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என்றால், அமெரிக்காவுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இதனால், மிகவும் பலவீனமான நிலையில் உள்ள இந்தப் போர் நிறுத்தம் எந்த நேரத்திலும் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அரபு லீக் மற்றும் ஐநா சபை வலியுறுத்தியுள்ளன!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



