வேஸுக்கு மாற்றாக துஜு செயலி தயாராக உள்ளதா? – நாடாளுமன்றத்தில் கேள்வி

top-news

கோலாலம்பூர்,  அக் 22: வேஸ் வழிகாட்டிச் செயலிக்கு மாற்றாக மலேசியாவில் உருவாக்கப்பட்டுள்ள துஜு செயலி, பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளதா என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யங் சியூஃபுரா ஒத்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

துஜு செயலியைத் தாமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்திப் பார்த்ததாகவும், அதன் செயல்பாடு ஏமாற்றமளிப்பதாகவும் பெந்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தெரிவித்தார்.

பொதுமக்களும் இந்தச் செயலி இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்குத் தயாராகவில்லை என்று கருத்துத் தெரிவித்து வருவதாக அவர் கூறினார்.

அரசு ஊழியர்கள் அலுவல் பணிகளின்போது வேஸ் செயலியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக உள்ளூர் செயலிகளைப் பயன்படுத்தும் அளவுக்கு அவை மேம்படுத்தப்பட்டுள்ளனவா என்றும் அவர் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ, துஜு செயலியின் சேவைகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதை ஒப்புக்கொண்டார்.

பொதுப்பணித் துறையின் கீழ் மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட துஜு செயலி, ஆரம்பத்தில் நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து நிலவரம், சுங்கச்சாவடிகள், ஓய்வு மற்றும் சேவைப் பகுதிகள், கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட தகவல்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

தற்போது, நெடுஞ்சாலைகளுக்குச் செல்லும் இணைப்புச் சாலைகளின் போக்குவரத்து நிலவரங்களையும் வழங்கும் வகையில் அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தின் GovTech முயற்சிகள் மூலம், துஜு உள்ளிட்ட உள்ளூர் செயலிகளை மேம்படுத்துவதற்குத் தொடர்புடைய தரப்புகளுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆராயப்படும் என்றார்.

இதற்கிடையே, வேஸ் செயலி மீதான கட்டுப்பாடு அனைத்து மலேசியர்களுக்கும் பொருந்தாது என்றும், கூட்டரசு அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்களது அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ளும்போது மட்டுமே இந்தத் தடை பொருந்தும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *