தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: 40-க்கும் மேற்பட்ட இடங்களில் விசாரணை
- Surendran Sumdraraj
- 19 Aug, 2026
சென்னை: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கில், தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மட்டும் பெருங்குடி பகுதியில் 4 இடங்களிலும், அண்ணா நகரில் 3 இடங்களிலும் என மொத்தம் 27 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுதவிர, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட மின்சார உபகரணங்களைத் தயாரிக்கும் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மின்வாரியத்துக்கான டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை நடைபெறும் இடங்களில் முக்கிய ஆவணங்கள், கொள்முதல் தொடர்பான பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சோதனை முடிவடைந்த பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அல்லது பிற ஆதாரங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



