மீண்டும் ஸ்டாலினே முதல்வர் ஆவார் - லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு!
- Muthu Kumar
- 04 Jan, 2026
2026 சட்டசபைத் தேர்தலில் வென்று மீண்டும் ஸ்டாலினே முதல்வராக பதவியேற்பார் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக்கணிப்பில் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளி விஜய் 2வது இடத்தை பிடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என்று 4 முனைப்போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் தரப்பில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு 234 தொகுதிகளிலும் 81,375 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நகரங்களில் 54.8 சதவிகிதம் பேரிடமும், எஞ்சிய இடங்களில் 45.2 சதவிகிதம் பேரிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் 21 முதல் 30 வயதினர் 25.6 சதவிகிதம் பேரிடமும், 46 முதல் 60 வயதினர் 23.5 சதவிகிதம் பேரிடமும் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.
அதேபோல் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 41.3 சதவிகிதம் பேர் 31 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கருத்துக்கணிப்பில் 81.71 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்றும், 10.55 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்கள் என்றும். 7.75 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவின்படி மீண்டும் ஸ்டாலினே முதல்வராக வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக்கணிப்பில் விஜய் 2வது இடத்தை பிடித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முந்தி விஜய் 2வது இடத்திற்கு வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல் விஜய்யின் அரசியல் வருகையால் யாருக்கு அதிக பாதிப்பு என்ற வகையிலும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலிடத்தில் அதிக பாதிப்பு திமுகவுக்கு என்றும், 2வது இடத்தில் விசிகவுக்கு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னரே அதிமுகவுக்கு பாதிப்பு உள்ளதாகவும், நாம் தமிழர் கட்சிக்கு சொற்ப பாதிப்பு மட்டுமே ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சீமான் மற்றும் அண்ணாமலை ஆகியோர் அடுத்தடுத்த நிலையில் உள்ளதாகவும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேபோல் இளைஞர்கள் வரவேற்கும் இளம் தலைவர் யார் என்ற கேள்விக்கு முதலிடத்தில் விஜய், 2வது இடத்தில் அண்ணாமலை, 3வது இடத்தில் உதயநிதி, 4வது இடத்தில் சீமான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



