முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
- Surendran Sumdraraj
- 16 Jul, 2026
சென்னை, ஜூலை 16:
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2026–2027ஆம் நிதியாண்டுக்கான முதல் முழுமையான பட்ஜெட்டை இம்மாத இறுதியில் தாக்கல் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி, பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், த.வெ.க. தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான புதிய திட்டங்கள், அவற்றுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கான அனுமதி, முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய தொழில் திட்டங்கள் ஆகியவையும் அமைச்சரவையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கும் தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கும் அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



