மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிரெயின்’ படத்தின் டீசர் விரைவில் வெளியீடு
- Surendran Sumdraraj
- 30 Jun, 2026
சென்னை, ஜூன் 30 –
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிரெயின்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை ஆல்பம் விரைவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இரயிலில் ஒரே இரவில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த டார்க் திரில்லர் படத்தில், விஜய் சேதுபதியுடன் சுருதி ஹாசன், நரேன், நாசர், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிஷ்கினே இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.
படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், கணினி வரைகலை (CG) பணிகளும் முழுமையாக முடிவடைந்துள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு சமீபத்தில் தெரிவித்திருந்தார். இரயிலை மையமாகக் கொண்ட காட்சிகளே படம் முழுவதும் இடம்பெறுவதால், பின்னணி தொழில்நுட்பப் பணிகள் அதிக நேரம் எடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், “Train teaser and audio coming soon” என்று படக்குழு சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளது. இதனால் விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



