தூத்துக்குடி புதிய அனல் மின் நிலைய திட்டத்தை அரசு கைவிட வேண்டும் – பெ.சண்முகம் வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 01 Sep, 2026
ஈரோடு, செப். 1 –
தூத்துக்குடியில் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு, மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பாலுக்கான கொள்முதல் விலையை மேலும் 3 ரூபாய் உயர்த்தி, ஒரு லிட்டர் பாலை 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவித்திருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்தார். அதேவேளையில், மாட்டுத்தீவனத்தின் விலை உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தூத்துக்குடியில் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே பல அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டு வருவதாக கூறினார்.
இத்தகைய சூழலில் தனியார் முதலீட்டில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது மின்சார கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார். எனவே, இத்திட்டத்தை அரசு கைவிட்டு, மாற்று எரிசக்தி வழிகள் மூலம் மின்சார தேவையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



