பள்ளிக்கரணைத் தடுப்புச்சுவரை உடைக்க வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 22 Oct, 2026
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டு வரும் தடுப்புச்சுவரையும் நடைபாதையையும் அகற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் என்ற பெயரில் தடுப்புச்சுவரும் நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அன்புமணி, இந்தத் திட்டம் சதுப்பு நிலத்தின் இயற்கையான நீரோட்டத்தைப் பாதித்து, மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தற்போது பெருமளவில் சுருங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், எஞ்சியுள்ள பகுதிகளையாவது பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றார்.
சதுப்பு நிலத்தில் மூன்று கிலோமீட்டர் நீளத்துக்கு தடுப்புச்சுவர் அமைப்பதுடன், இரண்டு கிலோமீட்டர் நீளத்துக்கு நடைபாதை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இப்பணிகள் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களையும் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும், சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை அரசு வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றத் தவறினால், தனது தலைமையில் சென்னையில் பொதுமக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அன்புமணி எச்சரித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

