தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் – கனிமொழி எம்.பி. கண்டனம்
- Surendran Sumdraraj
- 20 Jul, 2026
தூத்துக்குடி, ஜூலை 20-
விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பதிவில், விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்க முயற்சிக்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தமிழக முதலமைச்சர் விஜயை ஒருமையில் விமர்சித்ததுடன், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து போலீசார் மிரட்டல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் வெறுப்புணர்வை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதிகாலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காகத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி, மார்க்கண்டேயன் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க காவல்துறையைப் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், உடனடியாக மார்க்கண்டேயனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



