பிரதமரின் முடிவில்தான் இருக்கிறது! - ரஃபிசி ரம்லி
- Shan Siva
- 22 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 22: அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு முன்னெடுக்கப்படுகின்றன என்பது பிரதமரின் முடிவில்தான் உள்ளது என பெர்சாமா கட்சியின் தலைவர் ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.
அரசில் இருந்த தனது அனுபவத்தின் அடிப்படையில், சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டபோது அம்னோவிடம் இருந்து பெரிய அளவில்
எதிர்ப்பு எதுவும் காணப்படவில்லை என்று முன்னாள் பொருளாதார அமைச்சரான ரஃபிசி
கூறினார்.
எனினும், பல ஆண்டுகளாக தற்போதைய அரசியல் அமைப்பின் ஒரு பகுதியாக இருந்து வரும் அம்னோ, அரசின் சீர்திருத்தங்களுக்கு
முக்கிய உந்துசக்தியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“அரசாங்கத்தில் அம்னோதான் சீர்திருத்தங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்த்தால்
அது நடக்காது. சீர்திருத்தங்களை பிரதமர் மூலம் பக்காத்தான் ஹராப்பான் முன்னெடுக்க
வேண்டும்” என அவர் கூறினார்.
அமைச்சுகள் தனித்தனியாக சீர்திருத்தத் திட்டங்களை முன்வைக்கலாம் என்றாலும், அவற்றை அமைச்சரவைக்கு கொண்டு
செல்வதா இல்லையா என்பதை இறுதியில் பிரதமரே தீர்மானிப்பார் என்றும் ரஃபிசி
குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டமான AUKU-வை ரத்து செய்யும்
பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அண்மைய அறிவிப்பையும் இதற்கு உதாரணமாக அவர்
சுட்டிக்காட்டினார்.
13ஆவது மலேசியத் திட்டத்தில், ஒரு பொதுப் பல்கலைக்கழகத்திற்கு சுயாட்சியை வழங்கி முன்னோடித் திட்டமாக
செயல்படுத்தும் முன்மொழிவு ஏற்கனவே இடம்பெற்றுள்ளதாகவும், அந்த முன்மொழிவை உருவாக்குவதில்
தானும் பங்காற்றியதாகவும் அவர் கூறினார்.
பல்கலைக்கழக சுயாட்சி என்பது கல்விசார் சுதந்திரம் மட்டுமல்லாமல், நிதி சுயாட்சியையும் உள்ளடக்கியதாக
இருக்க வேண்டும் என்றும் ரஃபிசி வலியுறுத்தினார்.
1971ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட AUKU சட்டம், மாணவர்களின் போராட்டம், அமைப்பு உருவாக்கம் மற்றும் அரசியல், பொது விவகாரங்கள் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை குறித்து
நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருந்து வருகிறது.
தற்போது உயர்கல்வி அமைச்சு, AUKU-வை மாற்றியமைக்கும் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான அனைத்து அம்சங்களையும்
ஆய்வு செய்ய சுயாதீனக் குழுவை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



